Saturday, January 2, 2010

கடல்சார் மீன்பிடி ஒழுங்குமுறை மேலாண்மைச் சட்டத்தை முறியடிப்போம் !

மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் கடல்சார் மேலாண்மை ஒழுங்குமுறைச் சட்டம் 2009-ன் அநீதிகளைக் கண்டித்து சென்னை அடுத்த திருவொற்றியூரில், புரட்சிகர தொழிலாளர் முன்னணி அமைப்பினரால் 27.12.2009 அன்று ஞாயிற்றுக் கிழமை மாலை 3 மணி அளவில் கருத்தரங்கம் நடைபெற்றது.


சென்னை திருவொற்றியூரில் கடல்சார் மேலாண்மை ஒழுங்குமுறைச் சட்டம் 2009-ஐ கண்டித்து நடைபெற்ற கருத்தரங்கில் தோழர் தென்கனல் (புரட்சிகர தொழிலாளர் முன்னணி) தலைமை வகித்தார். தோழர். கடலார் (பத்திரிகையாளர்), தோழர். தாமரை(புரட்சிகர தொழிலாளர் முன்னணி), தோழர் தமிழ்மாறன் (புரட்சிகர தொழிலாளர் முன்னணி) ஆகியோர் கருத்துரை வழங்கினர். இக்கருத்தரங்கத்திற்கு மாவீரன் முத்துக்குமரன் பெயர் சூட்டப்பட்டிருந்தது.

இக்கருத்தரங்கத்தில் திரு.ராஜாமணி (நல்லதண்ணீர் ஓடைக்குப்பம் மீனவப் பஞ்சாயத்து), சத்தியநாதன் (திருச்சினாங்குப்பம் மீனவப் பஞ்சாயத்து), திரு.மாசிலாமணி (ஒண்டிக்குப்பம் மீனவப் பஞ்சாயத்து), திரு.மணி (திருவொற்றியூர் மீனவப் பஞ்சாயத்து), திரு.பழனி (பலகைத் தொட்டிக் குப்பம் மீனவ பஞ்சாயத்து), திரு.மாசிலாமணி ( தாழங்குப்பம் மீனவப் பஞ்சாயத்து), திரு.ராஜி (நெட்டுக்குப்பம் மீனவப் பஞ்சாயத்து), திரு.வரதன் (முகத்துவாரக்குப்பம் மீனவப் பஞ்சாயத்து), திரு.ராஜா எர்ணாவூர் குப்பம் மீனவப் பஞ்சாயத்து), திரு.சங்கர் (பெரிய காசிகோவில் குப்பம் மீனவப் பஞ்சாயத்து), திரு.துரை. செல்வராஜ் காட்டுக்குப்பம் மீனவப் பஞ்சாயத்து), சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் பேரவை (அசோக் லேலண்ட்), பெரியகுப்பம் மீனவப் பஞ்சாயத்தார், வ.உ.சி.நகர் மீனவ பஞ்சாயத்தார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

கருத்தரங்கில் உரையாற்றியவர்கள் பின்வரும் கருத்துக்களை பேசினார்கள்.


மீனவர்கள் 12 கடல் மைல்களுக்கு மேல் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியாது, மீறிச் சென்றால் 3 ஆண்டு சிறைத்தண்டனை, அல்லது 9 லட்சம் ரூபாய் அபராதம், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மீன் பிடிக்கக் கூடாது. மீறினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம், உயிரைப் பாதுகாக் உயிர் காக்கும் ஆடையில்லாத மீனவன் டெல்லி சென்று பர்மிட் வாங்க வேண்டுமா?, இச்சட்டங்களை மீறுபவர்கள் வழக்குகள் அனைத்தும் உயர்நீதிமன்றத்திலேயே விசாரிக்கப்படுமாம் என்று இச்சட்டங்கள் கூறுகிறது, ஆனால் இச்சட்டங்கள் வெளிநாட்டு மீன்பிடி நிறுவனங்களுக்குப் பொருந்தாது என்றும் இச்சட்டத்தை அம்பலப்படுத்தினார்கள்.அதே நேரத்தில் தமிழகம் ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடல் பகுதியில் உலகத் தரம் வாய்ந்த மீன் வகைகள் கிடைக்கின்றன. உலகின் மீன் உற்பத்தியில் இந்தியத் துணைக் கண்டம் 3-ம் இடத்தையும், நன்னீர் மீன் உற்பத்தியில் 2-ம் இடத்தையும் வகிக்கிறது. இவ்வளங்களை பன்னாட்டு ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கு காவு கொடுப்பதற்கே இது போன்ற கொடுஞ்சட்டங்களை போடுவதாகவும், இதன் மூலம் மீனவர்களை கடலைவிட்டு, கடற்கரையைவிட்டு துரத்தியபிறகு, அவ்விடத்தில் கேளிக்கை விடுதிகள், ரிசார்ட்டுகள், தீம் பார்க்குகள், மிதவை ஓட்டல்கள், கடல்பகுதி சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க சதித் திட்டம் தீட்டுவதாக குற்றம் சாட்டினார்கள்.

இதுவரை தமிழகத்திற்கிருந்த குறைந்த பட்ச உரிமையைக் கூட பறிக்கிறது, சுதந்திரமாக கடலுக்குச் சென்று மீன் பிடித்த மீனவர்கள் இனி எந்த இடத்தில், எந்த மீன், எவ்வளவு பிடிப்பது என்பதெல்லாம் இனி டெல்லி அரசுதான் தீர்மானிக்கும் தமிழக அரசு இனி தலையிட முடியாது. இதன் மூலம் தமிழகத்தின் இறையாண்மை பறிக்கப்படுகிறது என்றனர். ஏற்கெனவே இந்திய அரசு தனது விரிவாதிக்க நோக்கத்திற்காக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளது என்றும், இச்சட்டத்தின் மூலம் மேலும் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், இந்துமாக்கடலை ராணுவ மயமாக்கக் கைப்பற்றத் துடிக்கும் உலக ஏகாதிபத்தியங்களின் போட்டியால் இந்திய துணைக் கண்டத்தில் பாதிக்கப்படும் என கண்டனம் தெரிவித்தனர்.பு

.தொ.மு, தோழர்கள்,மீனவப்பெருங்குடிமக்கள் ற்றும் பொதுமக்கள் உட்பட150 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.இறுதியாக நமக்கென்று சொந்த இறையாண்மை கொண்ட தேசிய அரசு வேண்டும். உழவர் தொழிலாளர் தலைமையிலான தமிழ்தேசிய மக்கள் சனநாயக அரசமைக்க மீனவர்களும், உழைக்கும் மக்களும் ஒன்றிணைந்து பேராடவேண்டும் என்று பேசினார்கள்.

இறுதியில் கீழ்க்கண்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கருத்தரங்கில் தோழர் பாண்டியன் நன்றியுரை கூறினார்.

1. இந்திய அரசானது கடல் மீன்பிடி தொழில் ஒழுங்கமுறை சட்ட மசோதா ஒன்றைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இது ஏகாதிபத்திய உலகமயமாக்கல் கொள்கை அடிப்படையில் மீனவர்களிடமிருந்து மீன்பிடி தொழிலை ஒழித்து பன்னாட்டு நிறுவனங்களின் கையில் கொடுப்பதற்கான சதித் திட்டமாகும். மேலும், கடற்கரை பகுதியில் நீண்ட சாலைகள் அமைப்பது, அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டுவது, ரிசார்ட்டுகள் அமைப்பது ஆகியவற்றுக்காக கடற்கரை பகுதிகளில் இருந்து மீனவர்களை வெளியேற்றும் திட்டத்தையும் அரசு செயல்படுத்தி வருகிறது. இது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறித்து அவர்களை சொந்த மண்ணிலிருந்து விரட்டுகின்ற சதிச் செயலாகும். எனவே, கடல் மீன்பிடி தொழில் ஒழுங்குமுறை மசோதாவையும், மீனவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகளையும் கைவிடும்படி இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

2. தமிழகக் கடல் பகுதியில் சிங்கள இனவெறி கூலிப்படையால் இதுவரை 416 தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 95 தமிழக மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். 1000-க்கும் மேற்பட்டவர்கள் உடலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. பலநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள வலைகள், படகுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பல ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். இப்படி தமிழினம் சிங்கள இனவெறியர்களால் அழிக்கப்படுகின்ற போதும் இந்திய ஏகாதிபத்தியமோ இலங்கை மீதான தனது மேலாதிக்கத்தை நிறுவிக் கொள்ள சிங்கள அரசின் நட்புக்காக சிங்கள இனவெறிக்கு தமிழினத்தைப் பலியிடுவது என்ற கொள்கையைக் கடைபிடிக்கிறது. ஒன்றரைக் கோடி மக்கள் தொகை கொண்ட சிங்கள அரசின் நட்பா ஏழு கோடி மக்கள் கொண்ட தமிழ் நாட்டின் நட்பா எது வேண்டும் என்பதை இந்தியப் பேரரசு தீர்மானித்துக் கொள்ளட்டும்.

3. தமிழக கடல் பகுதியில் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் மீன்பிடி தொழிலை செய்து வந்துள்ளனர். இங்கு தமிகத்திற்கு சொந்தமாக இருந்து வந்த கச்சத்தீவை இந்திய ஏகாதிபத்திய அரசானது தனது விரிவாதிக்க நோக்கங்களுக்காகவும், சிங்கள அரசினுடைய நட்புக்காகவும், சிங்கள அரசிற்கு தாரை வார்த்தது. இதனால் தமிழக மீனவர்கள் தங்களுடைய மீன்பிடி உரிமையை இழந்ததுடன் சிங்கள இனவெறி கூலிப்படையால் அடிக்கடி சுட்டுக் கொல்லப்படும் கொடுஞ்செயலுக்கு ஆளாகின்றனர். எனவே, தமிழக மீனவர்களை பாதுகாக்கும் பொருட்டும் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டிடவும் கச்சத்தீவு திரும்பப் பெறப்பட வேண்டும். அதுமட்டுமின்றி தமிழக கடல் பகுதியின் ஆளுகையும் தமிழக மீனவர்களின் உரிமையாக்கப்பட வேண்டும். இதற்குத் தடையாக உள்ள இந்திய - இலங்கை கச்சத்தீவு ஒப்பந்தம் இரத்து செய்யப்பட வேண்டும். அத்துடன் மீனவர்கள் தங்கள் மீன்பிடி தொழிலை அச்சமின்றி நடத்துவதற்கும், தங்கள் உயிரை தற்காத்துக் கொள்ளவும் தமிழக மீனவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

4. முல்லை பெரியாறு அணையில் 152 அடி நீரை தேக்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்த பிறகும் கூட அதை நிறைவேற்றாமல் புதிய அணை கட்டப்போவதாக அடாவடித்தனம் செய்து வருகிறது கேரள சி.பி.எம்.அரசு. அத்துடன் புதிய அணை கட்டுவதற்கான பணிகளையும் துவக்கிவிட்டது. கேரள சி.பி.எம். அரசின் இந்த அடாவடித் தனத்திற்கு இந்திய அரசு அனுமதி அளித்ததன் மூலம் தமிழகத்திற்கு துரோகம் இழைத்துள்ளது. அதே போன்று உச்சநீதிமன்றமும் விசாரணை நடத்துவதாக கூறி இழுத்தடித்து நாடகமாடி வருகிறது. அத்துடன் இல்லாமல் அணையில் நீரை தேக்குவது தொடர்பாக புதிய வழக்கு விசாரணை நடத்தப் போவதாகவும் கூறி இந்த துரோக நாடகத்தில் தனக்கும் பங்குள்ளது என்பதை வெளிப்படுத்தி உள்ளது. கருணாநிதி தலைமையிலான தமிழக அரசோ, தனது பதவி சுகத்திற்காக முல்லைபெரியாறு அணையில் உள்ள தமிழகத்தின் உரிமைகளை பலியிட்டு வருகிறது. கேரள அரசு, இந்திய அரசு, உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் கூட்டுச் சதியை இக்கூட்டம் வன்மையாக கண்டனம் செய்கிறது. முல்லைப் பெரியாறு அணையின் மீதான தமிழக உரிமைகளை மீட்டெடுக்க அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போராட இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

5. ஈழத்தின் மீதான சிங்கள இனவெறி அரசின் இன அழிப்புப் போரின்போது கடந்த மே மாதம் வரை ஒரு லட்சம் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். அதன் பின்னர் சிங்கள இனவெறியன் ராஜபக்சே அரசினால் 3 லட்சம் ஈழத் தமிழர்கள் சிறைபிடிக்கப்பட்டு முள்வேலி முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உணவு, உடை, இருப்பிடம், மருந்து என எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி அல்லலுற்று வருகின்றனர். முகாமில் உள்ளவர்களை அவர்களின் வரலாற்றுத் தாயகமான சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றுவதும், அதே இடங்களில் சிங்களவர்களை குடியேற்றுவதும்தான் சிங்கள இனவெறியன் ராஜபக்சேவின் திட்டமாகும். மேலும் முகாமில் உள்ள இளைஞர்கள், இளம் பெண்கள், குழந்தைகளைப் பிரித்து எடுத்து படுகொலை செய்கின்ற இன அழிப்பு நடவடிக்கைகளை ஹிட்லரின் யூதர் மீதான இனப்படுகொலையையும் விஞ்சி செய்கிறான். இவற்றை உலக நாடுகள் கைகட்டி, வாய் மூடி மௌனமாக வேடிக்கைப் பார்க்கின்றன. இக்கொடுஞ்செயல்களையும், உலகநாடுகளின் மௌனத்தையும் இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக ஈழத் தமிழர்கள் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு அவர்களின் சொந்த தாய் மண்ணில் குடியேற்றப்பட வேண்டும். அத்துடன் ஒரு லட்சம் ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே, பொன்சேகா தவிர அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து, அவர்களை பின்னணியிலிருந்து இயக்கிய சோனியா, மன்மோகன் சிங், கருணாநிதி கும்பல் மீதும் போர்க் குற்ற விசாரணை பகிரங்கமாக நடத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

6. தெற்காசியப் பகுதியில் இந்திய ஏகாதிபத்தியமானது விரிவாதிக்க வெளியுடன் பேட்டை ரவுடியாக வலம் வருகிறது. இதைத் தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்ள அண்டை நாடுகளில் ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளையும், போர் நடவடிக்கைகளையும் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் தலைமையிலான அரசைக் கவிழ்த்தது. ஈழத்தில் சிங்கள இனவெறி அரசுடன் கள்ளக் கூட்டு வைத்துக் கொண்டு இன அழிப்புப் போரில் ஈடுபட்டு ஒரு லட்சம் தமிழர்களை கொன்று குவித்தது. இந்திய ஏகாதிபத்தியத்தின் இத்தகைய விரிவாதிக்க வெறிக்கு எதிராக தமிழக உழைக்கும் மக்களும், இந்தியாவோடு அடிமைப்பட்டுக் கிடக்கும் பிற தேசிய இன உழைக்கும் மக்களும், தெற்காசிய பகுதி உழைக்கும் மக்களும் ஒன்றிணைந்து போராட முன்வருமாறு இக்கூட்டம்

கேட்டுக் கொள்கிறது.