முல்லைப் பெரியாறு அணை தமிழர்களின் பொறியியல் - தொழில் நுட்பச் சாதனை
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வேளாண்மைக்குத் தேவையான நீர்ப்பாசனக் கட்டமைப்பை உருவாக்குவதில் தமிழர்கள் தலைசிறந்து விளங்கி வருகின்றனர். நீர்ப்பாசனப் பொறியியல், நீர்ப்பாசனப் பயன்பாட்டு நிர்வாகம் என இரு துறைகளில் சிறந்து விளங்கி வருவதற்குத் தமிழகத்தில் உள்ள 39 ஆயரம் ஏரிகளும், குளங்களும், கண்மாய்களும் சான்றாக உள்ளன. இதுமட்டும்மல்லாது அனைக்கட்டுக்களை உருவாக்குவதிலும் தமிழர்கள் உலகத்திற்கே முன்னோடியாக இருந்த்துள்ளனர் என்பதற்குச் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் கரிகாலன் காலத்தில் கட்டப்பட்ட கல்லணை கம்பீரத்துடன் நிலைத்து நின்று பயன்பட்டுக் கொண்டிருப்பதைக் கூறலாம். ஆங்கிலேயர்கள் தமது ஆட்சிக் காலத்தில் கட்டியெழுப்பிய அணைக் கட்டுமானங்களுக்குக் கல்லணையின் கட்டுமானமே அடிப்படையாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். அதனால்தான் பேயர்டு ஸ்மித் தனது (lrrigation in south india) நூலில் (1853) "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய இந்த அணை மிகச்சிறந்த பொறியியல் சாதனை எனக் கூறிப்பிட்டார்.
மேலும் 1874 இல் கோதாவரி ஆற்றில் தெளலீஸ்வரம் அணையைக் கட்டிய ஆர்தன் காட்டன் தனது நூலில் "ஆழம் காண இயலாத மணற்படுகையில் எப்படி அடித்தளம் அமைப்பது என்ற தொழில் நுட்பத்தை இவர்களிடமிருந்து (கல்லணையைக் கடியவர்களிடம்) தான் நாம் தெரிந்து கொண்டோம். இந்த பாடத்தைப் பயன்படுத்தி ஆற்றுப்பாலங்கள், அணைக்கட்டுகள் போன்ற நீரியல் கட்டுமானங்களைக் கட்டினோம்... எனவே இந்த மகத்தான சாதனை புரிந்த பெயர் தெரியாத அந்நாளைய மக்களுக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். ஆக ஆற்றைத் தடுத்து அணை கட்டி அந்நீரை வேளாண்மைக்குப் பயன் படுத்திய தொழில் நுட்பமும் நிர்வாகமும் தமிழ் வசம் நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே கைவரப்பெற்ற ஒன்றாகும் எனலாம்.
பொதுவாக ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணைகளில் தேக்கிவைக்கப்படும் தண்ணீரில் பாசனத்திற்காக வெளியேறும் நீரும், வெள்ளம் வரும் காலத்தில் உபரி நீரும் மதகுகள் வழியே அணையிலிருந்து வழிந்தோடும்வகையில் அமைந்திருக்கும். ஆனால் முல்லைப் பெரியாறு அணைத் திட்டமானது, மேற்கு நோக்கி பாயிந்தோடும் ஆற்று நீரை அணைகட்டித் தேக்கி வைத்து அந்நீரை ஆற்றின் எதிர் திசையில் கிழக்கு நோக்கி மலையைக் குடைந்து சுரங்கம் தோண்டி, அதன் வழியாக கொண்டுவந்து வைகை ஆற்றோடு முல்லைப் பெரியாற்று நீரை இணைக்கும் நோக்கத்தோடுதான் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது. ஓர் ஆற்றுப் படுக்கையிலிருந்து மற்றோர் ஆற்றுப் படுகைக்கு நீரைத் திருப்பும் இத்திட்டம் உலகிலேய முதலாவது எனக் கருதலாம். இவ்வாறான முல்லைப் பெரியாறு அணை வெகு சீக்கிரமாகவோ, வெகு சுலபமாகவோ, எவ்வித பாதிப்பும் இன்றியோ கட்டப்படவில்லை. மாறாக பல்வேறு இடர்பாடுகளையும் உயிர் இழப்புகளையும் கடந்துதான் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது.
முல்லைப் பெரியாறு பகுதிகள் யாவும் அடர்ந்த வனப் பகுதியாகும். கொடிய விலங்குகள் மற்றும் மலேரியா, காலரா, முடக்குவாதம் போன்ற நோய்கள் பரவும் தட்பவெப்பச் சூழல்களைக் கொண்ட பகுதியாகும். திடிரென வருகின்ற காட்டாற்று வெள்ளம் அணைக் கட்டுமானங்களை அடித்துச் சென்றதோடு, அப்பணியில் ஈடுபட்டுருந்த ஊழியர்களையும் அடித்துச் சென்றிருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணையின் வேலைகள் பாதியளவு முடிவடைந்தநிலையில் 1890 இல் பெரியாற்றில் வந்த பெரு வெள்ளமானது அணைக் கட்டுமானம் அனைத்தையும் உடைத்துச் சென்றுவிட்டது. ஆகவே இந்த அணையைக் கட்டும் திட்டத்தைக் கைவிடுவதாக ஆங்கிலேயே அரசு அறிவித்தது. ஆனாலும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டுவதில் பென்னிக் குயிக் உறுதியாக இருந்தார். ஆணை கட்டும் செலவினங்களுக்காக இங்கிலாந்து சென்று தனது சொத்துக்களையெல்லாம் விற்று விட்டு, அதில் கிடைத்த 85 இலச்சம் ரூபாயையும் செலவழித்துத்தான் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடிக்கிறார். பென்னிக் குயிக். இரண்டாவது முறையாக அணை கட்டும் போது அணையானது வெள்ளத்தில் உடையாமல் இருக்க 185 இடங்களில் தடுப்பு அணைகளைக் கட்டினார். அதோடு முல்லைப் பெரியாறு அணையின் இடது புறம் கால்வாய் வெட்டி தண்ணீரைத் திருப்பி விட்டார். அணை முழுவதும் கட்டி முடிக்கப்பட்டவுடன் இடது புறம் வெட்டப்பட்ட கால்வாயில் 240 அடி நீளமுள்ள சிற்றனை (பேபி டேம் ) ஒன்றையும் கட்டி முடித்தார்.
1241 அடி நீளத்தில் (சுமார் அரை கிலோமீட்டர் தூரம்) மிகப்பெரிய அளவில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் அடித்தளத்திலிருந்து 172 அடியாகும். இதில் நீரைத் தேக்கும் உயரம் 155 அடியாகும். திடீரென வரும் வெள்ளத்தையும் சமாளிக்கும் வகையில் 152 அடிவரை மட்டுமே நீர் தேக்கப்பட்டு வருகின்றது. இவ்வனையானது நீர்த் தேங்கும் பகுதியில் செங்குத்தாகவும், அதற்குத் எதிர்ப்புறம் காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் சரிவாகவும் கட்டப்பட்டிருக்கிறது. இதனால் 172 அடி உயரமுள்ள அணையின் மேற்புறம் 12 அடி அகலத்திலும் அடித்தளம் 144 அடி அகலத்திலும் (மொத்த உயரத்தில் முக்கால் பங்கு அடித்தளம்) அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அணையில் தேங்கும் நீரிணை கிழக்கு திசையில் 5765 அடி நீளமும் (சுமார் 2 கிலோமீட்டர்). 60 அடி ஆழமும் 80 அடி அகலமும் கொண்ட பெரிய கால்வாய் மூலம் கொண்டு வந்து, பின்பு அந்நீரை மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட 5345 அடி நீளமும் 15 அடி அகலமும் கொண்ட சுரங்கத்தின் மூலம் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரப்படுகிறது. அதற்குப் பிறகு 78 கிலோமீட்டர் நீளமுள்ள பெரியாறு கால்வாய் மூலம் வைகை ஆற்றுடன் இணைக்கப்படுகிறது. அணையிலிருந்து மேற்குறிப்பிட்ட சுரங்கத்தின் வழியாக வினாடிக்கு 2000 கன அடி அளவு தண்ணீரை மட்டுமே வெளிய எடுக்கமுடியும். மேலும். 152 அடி உயரமுள்ள அணையில் 104 அடி வரை தேங்கும் நீரைத்தான் எடுக்க முடியும். 104 அடிக்குக் கீழே உள்ள நீரை எடுக்க முடியாது. ஏனென்றால் தண்ணீரைக் கொண்டுவறப் பயன்படுத்தும் சுரங்க வழியானது 104 அடி வரை உள்ள நீரிணை மட்டுமே எடுக்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, அணையின் மொத்த கொள்ளளவான 15 டி.எம்.சி. தண்ணீரில் 10 டி.எம்.சி. நீரை மட்டுமே அணையிலிருந்து வெளியே கொண்டுவரமுடியும். மீதமுள்ள 5 டி.எம்.சி. நீர் கிடப்பு நீராக (Dead Storage) அணைக்குள் இருக்கும். இவ்வாறாக உருவாக்கப்பட்ட முல்லைப் பெரியாறு அணையானது முழுவதும் முட்டுச் சுவரால் தடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் மற்ற அணைகளைப் போல அல்லாமல் நீர் தேங்குமிடம். உபரி நீர் வெளியேறுமிடம், தமிழ்நாட்டிற்கு நீர் வருமிடம் ஆகிய அனைத்தும் வெவ்வேறு இடங்களில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முல்லைப் பெரியாறு அணை ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கட்டப்பட்டிருந்தாலும் அவ்வையின் தொழில்நுட்பமும் உழைப்பும் தமிழர்களுக்குச் சொந்தமானவை. பென்னிக் குயிக் மேற்கொண்ட பெருமுயற்சிக்கு உயிரோட்டம் தந்தவர்கள் தமிழர்கள்தான். அணையின் கட்டுமானப் பொருட்களும் தமிழ்நாட்டைச் சார்ந்ததுதான். அனைக்குத்தேவையான கட்டுமானக் கருவிகள் அனைத்தும் மதுரைப் பகுதியிலிருந்து கொண்டு செல்லப்பட்டவை. அணையின் இருபுறம் கருங்கற்கள், சுண்ணாம்பு, செங்கல் கடுக்காய், இஞ்சி, கருப்பட்டி, தேக்குமரப்பட்டை போன்ற பொருட்களையும் பயன்படுத்தித்தான் இன்வனை கட்டப்பட்டிருக்கிறது. முல்லைப் பெரியாறு அணை மிகப்பெரும் அளவிலான பொருட் செலவு மட்டுமின்றி மிகப்பெரும் அளவிலான உயிர்ச் சேதங்களையும் செலவாகக்கொண்டு கட்டப்பட்டிருக்கிறது. இந்நேரத்தில் நினைக்கப் படவேண்டியவர் பென்னிக் குயிக் மட்டுமல்ல, அவோரோடு சேர்ந்து உழைத்த தொழிலாளிகள், உயிர் நீத்த உழைப்பாளிகள் உடன் நின்ற அதிகாரிகளும்-உயிர் நீத்த அதிகாரிகளும்தான்.
முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு அவ்வணையின் நீர் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய அய்ந்து மாவட்ட மக்களின் வேளாண்மை மற்றும் குடிநீர்த் தேவைகள் ஓரளவு நிறைவேறின. மேலும் இம்மாவட்டங்களின் பாசனப் பரப்பு 20 ஆயிரம் ஏக்கரிலிருந்து 2 இலச்சம் ஏக்கராக அதிகரித்தது.
தொடரும்...