Tuesday, May 18, 2010

புரட்சிகர இளைஞர் முன்னணி குறும்பாலம் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

பொன்னேரி-குன்னமஞ்சேரி ஆரணி ஆற்றின் நடுவே குறும்பாலம் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்.

சென்னை அடுத்த பொன்னேரியில் புரட்சிகர இளைஞர் முன்னணி,ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து பொன்னேரி-குன்னமஞ்சேரி ஆரணி ஆற்றின் நடுவே குறும்பாலம் அமைக்கக்கோரி 26-4-2010 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


பொன்னேரி தலுக்காவில் உள்ள பொன்னேரி-குன்னமஞ்சேரி ஆரணி ஆற்றின் நடுவே குறும்பாலம் அமைக்கக்கோரி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் போராடி வருகின்றனர்.இதுவரை அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.மாறாக அரசும், அதிகாரிகளும் பொய்யான வாக்குறுதிகளைக் அள்ளிவீசி மக்களை எய்து வறுகின்றனர். இதை கண்டித்தும் பொன்னேரி-குன்னமஞ்சேரி ஆரணி ஆற்றின் நடுவே குறும்பாலம் உடனே அமைக்கக்கோரி புரட்சிகர இளைஞர் முன்னணி,ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் சார்பில் 26-4-2010 அன்று காலை 10.00 மணி அளவில் பொன்னேரி,அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


இவ்ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்.அறிவுமதி(புரட்சிகர இளைஞர் முன்னணி) தலைமை வகித்தார். தோழர்.கதிர்நிலவன் (புரட்சிகர இளைஞர் முன்னணி), தோழர்.ஆனந்தன் (ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி),குமரன் (புரட்சிகர தொழிலாளர் முன்னணி), வழக்குரைஞர்.பொன்செல்வன், வழக்குரைஞர்.லெனின், வழக்குரைஞர்.இளவரசன், வழக்குரைஞர்.புருசோத்தமன், வழக்குரைஞர்.கோபி,மாதவன்( 17 வது வார்டு உறுப்பினர் பெரியக்காவனம்),தனுஸ்கோடி(திருவள்ளுவர் மக்கள் மேம்பாட்டுசாங்கம்),கோபி(குன்னம்சேரி),ஜெயசீலன்(ஏலியம்பேடு),தேவராஜ்(வைரவன்குப்பம்),குப்பன்(பெறுவாயல்), சங்கர்(வைரவன் குப்பம்),பாலைய்யா (நரிக்குறவர்கள் தலைவர் இந்திராநகர்),டேனியல்(தலைவர் இந்திராநகர்),ஏழுமலை(பெற்றோர் ஆசிரியர் கழகம் சின்னக்காவனம்) காந்திமதி (2வது வார்டு உறுப்பினர் சின்னக்காவனம்),அற்புதம்மாள்( மகளிர் சுய உதவிக்குழு-ஏலியம்பேடு) ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில் 200 க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.








Tuesday, February 16, 2010

தமிழ் வழியில் சமச்சீர் கல்வியை செயல்படுத்த கோரி புரட்சிகர மாணவர் முன்னணி சார்பில் கருத்தரங்கம் -ஓவியக்காட்சி



சென்னை- பெரம்பூரில் தமிழ் வழியில் சமச்சீர் கல்வியை செயல்படுத்த கோரி 15-02-2010 அன்று மாலை 3.00 மணியளவில் புரட்சிகர மாணவர் முன்னணி சார்பில் கருத்தரங்கம் -ஓவியக்காட்சியும் நடைபெற்றது.




தமிழகத்தில் நிலவிவரும் கல்வியிலுள்ள ஏற்றத்தாழ்வை அகற்ற வேண்டும், கல்வி அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என கல்வியாளர்களும், சமுக முன்னணியாளர்களும், மக்கள் நலன் கொண்ட புரட்சிகர அமைப்புகளும் போராடிவருகின்றனர். இந்நிலையில் சமச்சீர் கல்வியை தமிழ் வழியில் செயல்படுத்தவும் , கீழ்கண்ட முழக்கத்தின்


அடிப்படையில்தமிழக அரசே!


தமிழர்களை தமிங்கிலர்களாக்கும் ஆங்கில வழிப்பள்ளிகளை மூடு !




தமிழ் நாட்டை தமிங்கில நாடாக்கும் ஆங்கில வழிப்பள்ளிகளை மூடு !




தமிழ் தேசிய வேரில் கொதிநீரை ஊற்றும் ஆங்கில ஆங்கில வழிப்பள்ளிகளை மூடு !




தமிழர்களை இழிவுப்படுத்தி அடிமைப்படுத்தும் ஆங்கில வழிப்பள்ளிகளை மூடு !




சமச்சீர் கல்வி என்ற பெயரில் ஆங்கில கடை வியாபாரிகளுக்கு எடுபிடி வேலை செய்யாதே !




தமிழ் வழியில் சமச்சீர் கல்வியை செயல்படுத்து ! மாணவர்களே


ஆங்கில அடிமைக் கல்வியை துக்கி எறிவோம் !




தமிழ் வழியில் சமச்சீர் கல்விக்காக போராடுவோம் !




தமிழக அரசை வலியுறுத்தி 15-02-2010 மாலை 3.00 மணியளவில் பெரம்பூர், செம்பியம் வணிகர் சங்க திருமணக் கூடத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு தோழர்.கபிலன் ( புரட்சிகர மாணவர் முன்னணி அமைப்பாளர் ) தலைமை வகித்தார், பேரா.முத்துக்குமரன் ( சமச்சீர் கல்விக்குழு தலைவர் ), எஸ்.எஸ்.ராஜகோபாலன் ( சமச்சீர் கல்விக்குழு உறுப்பினர் ), பேரா.வசந்தி தேவி ( மேனாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ), பேரா.பிரபா.கல்விமணி( மக்கள் கல்வி கூட்டமைப்பு ) , தோழர்.மார்க்ஸ் ( புரட்சிகர மாணவர் முன்னணி ) ஆகியோர் கருத்துரை வழங்கினர். இதில் சுமார் 200௦௦ மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட 300 பேர் கலந்துகொண்டனர்





Saturday, January 2, 2010

கடல்சார் மீன்பிடி ஒழுங்குமுறை மேலாண்மைச் சட்டத்தை முறியடிப்போம் !

மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் கடல்சார் மேலாண்மை ஒழுங்குமுறைச் சட்டம் 2009-ன் அநீதிகளைக் கண்டித்து சென்னை அடுத்த திருவொற்றியூரில், புரட்சிகர தொழிலாளர் முன்னணி அமைப்பினரால் 27.12.2009 அன்று ஞாயிற்றுக் கிழமை மாலை 3 மணி அளவில் கருத்தரங்கம் நடைபெற்றது.


சென்னை திருவொற்றியூரில் கடல்சார் மேலாண்மை ஒழுங்குமுறைச் சட்டம் 2009-ஐ கண்டித்து நடைபெற்ற கருத்தரங்கில் தோழர் தென்கனல் (புரட்சிகர தொழிலாளர் முன்னணி) தலைமை வகித்தார். தோழர். கடலார் (பத்திரிகையாளர்), தோழர். தாமரை(புரட்சிகர தொழிலாளர் முன்னணி), தோழர் தமிழ்மாறன் (புரட்சிகர தொழிலாளர் முன்னணி) ஆகியோர் கருத்துரை வழங்கினர். இக்கருத்தரங்கத்திற்கு மாவீரன் முத்துக்குமரன் பெயர் சூட்டப்பட்டிருந்தது.

இக்கருத்தரங்கத்தில் திரு.ராஜாமணி (நல்லதண்ணீர் ஓடைக்குப்பம் மீனவப் பஞ்சாயத்து), சத்தியநாதன் (திருச்சினாங்குப்பம் மீனவப் பஞ்சாயத்து), திரு.மாசிலாமணி (ஒண்டிக்குப்பம் மீனவப் பஞ்சாயத்து), திரு.மணி (திருவொற்றியூர் மீனவப் பஞ்சாயத்து), திரு.பழனி (பலகைத் தொட்டிக் குப்பம் மீனவ பஞ்சாயத்து), திரு.மாசிலாமணி ( தாழங்குப்பம் மீனவப் பஞ்சாயத்து), திரு.ராஜி (நெட்டுக்குப்பம் மீனவப் பஞ்சாயத்து), திரு.வரதன் (முகத்துவாரக்குப்பம் மீனவப் பஞ்சாயத்து), திரு.ராஜா எர்ணாவூர் குப்பம் மீனவப் பஞ்சாயத்து), திரு.சங்கர் (பெரிய காசிகோவில் குப்பம் மீனவப் பஞ்சாயத்து), திரு.துரை. செல்வராஜ் காட்டுக்குப்பம் மீனவப் பஞ்சாயத்து), சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் பேரவை (அசோக் லேலண்ட்), பெரியகுப்பம் மீனவப் பஞ்சாயத்தார், வ.உ.சி.நகர் மீனவ பஞ்சாயத்தார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

கருத்தரங்கில் உரையாற்றியவர்கள் பின்வரும் கருத்துக்களை பேசினார்கள்.


மீனவர்கள் 12 கடல் மைல்களுக்கு மேல் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியாது, மீறிச் சென்றால் 3 ஆண்டு சிறைத்தண்டனை, அல்லது 9 லட்சம் ரூபாய் அபராதம், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மீன் பிடிக்கக் கூடாது. மீறினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம், உயிரைப் பாதுகாக்க உயிர் காக்கும் ஆடையில்லாத மீனவன் டெல்லி சென்று பர்மிட் வாங்க வேண்டுமா?, இச்சட்டங்களை மீறுபவர்கள் வழக்குகள் அனைத்தும் உயர்நீதிமன்றத்திலேயே விசாரிக்கப்படுமாம் என்று இச்சட்டங்கள் கூறுகிறது, ஆனால் இச்சட்டங்கள் வெளிநாட்டு மீன்பிடி நிறுவனங்களுக்குப் பொருந்தாது என்றும் இச்சட்டத்தை அம்பலப்படுத்தினார்கள்.



அதே நேரத்தில் தமிழகம் ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடல் பகுதியில் உலகத் தரம் வாய்ந்த மீன் வகைகள் கிடைக்கின்றன. உலகின் மீன் உற்பத்தியில் இந்தியத் துணைக் கண்டம் 3-ம் இடத்தையும், நன்னீர் மீன் உற்பத்தியில் 2-ம் இடத்தையும் வகிக்கிறது. இவ்வளங்களை பன்னாட்டு ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கு காவு கொடுப்பதற்கே இது போன்ற கொடுஞ்சட்டங்களை போடுவதாகவும், இதன் மூலம் மீனவர்களை கடலைவிட்டு, கடற்கரையைவிட்டு துரத்தியபிறகு, அவ்விடத்தில் கேளிக்கை விடுதிகள், ரிசார்ட்டுகள், தீம் பார்க்குகள், மிதவை ஓட்டல்கள், கடல்பகுதி சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க சதித் திட்டம் தீட்டுவதாக குற்றம் சாட்டினார்கள்.

இதுவரை தமிழகத்திற்கிருந்த குறைந்த பட்ச உரிமையைக் கூட பறிக்கிறது, சுதந்திரமாக கடலுக்குச் சென்று மீன் பிடித்த மீனவர்கள் இனி எந்த இடத்தில், எந்த மீன், எவ்வளவு பிடிப்பது என்பதெல்லாம் இனி டெல்லி அரசுதான் தீர்மானிக்கும் தமிழக அரசு இனி தலையிட முடியாது. இதன் மூலம் தமிழகத்தின் இறையாண்மை பறிக்கப்படுகிறது என்றனர். ஏற்கெனவே இந்திய அரசு தனது விரிவாதிக்க நோக்கத்திற்காக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளது என்றும், இச்சட்டத்தின் மூலம் மேலும் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், இந்துமாக்கடலை ராணுவ மயமாக்கக் கைப்பற்றத் துடிக்கும் உலக ஏகாதிபத்தியங்களின் போட்டியால் இந்திய துணைக் கண்டத்தில் பாதிக்கப்படும் என கண்டனம் தெரிவித்தனர்.பு

.தொ.மு, தோழர்கள்,மீனவப்பெருங்குடிமக்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட150 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.இறுதியாக நமக்கென்று சொந்த இறையாண்மை கொண்ட தேசிய அரசு வேண்டும். உழவர் தொழிலாளர் தலைமையிலான தமிழ்தேசிய மக்கள் சனநாயக அரசமைக்க மீனவர்களும், உழைக்கும் மக்களும் ஒன்றிணைந்து பேராடவேண்டும் என்று பேசினார்கள்.

இறுதியில் கீழ்க்கண்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கருத்தரங்கில் தோழர் பாண்டியன் நன்றியுரை கூறினார்.

1. இந்திய அரசானது கடல் மீன்பிடி தொழில் ஒழுங்கமுறை சட்ட மசோதா ஒன்றைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இது ஏகாதிபத்திய உலகமயமாக்கல் கொள்கை அடிப்படையில் மீனவர்களிடமிருந்து மீன்பிடி தொழிலை ஒழித்து பன்னாட்டு நிறுவனங்களின் கையில் கொடுப்பதற்கான சதித் திட்டமாகும். மேலும், கடற்கரை பகுதியில் நீண்ட சாலைகள் அமைப்பது, அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டுவது, ரிசார்ட்டுகள் அமைப்பது ஆகியவற்றுக்காக கடற்கரை பகுதிகளில் இருந்து மீனவர்களை வெளியேற்றும் திட்டத்தையும் அரசு செயல்படுத்தி வருகிறது. இது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறித்து அவர்களை சொந்த மண்ணிலிருந்து விரட்டுகின்ற சதிச் செயலாகும். எனவே, கடல் மீன்பிடி தொழில் ஒழுங்குமுறை மசோதாவையும், மீனவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகளையும் கைவிடும்படி இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

2. தமிழகக் கடல் பகுதியில் சிங்கள இனவெறி கூலிப்படையால் இதுவரை 416 தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 95 தமிழக மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். 1000-க்கும் மேற்பட்டவர்கள் உடலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. பலநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள வலைகள், படகுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பல ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். இப்படி தமிழினம் சிங்கள இனவெறியர்களால் அழிக்கப்படுகின்ற போதும் இந்திய ஏகாதிபத்தியமோ இலங்கை மீதான தனது மேலாதிக்கத்தை நிறுவிக் கொள்ள சிங்கள அரசின் நட்புக்காக சிங்கள இனவெறிக்கு தமிழினத்தைப் பலியிடுவது என்ற கொள்கையைக் கடைபிடிக்கிறது. ஒன்றரைக் கோடி மக்கள் தொகை கொண்ட சிங்கள அரசின் நட்பா ஏழு கோடி மக்கள் கொண்ட தமிழ் நாட்டின் நட்பா எது வேண்டும் என்பதை இந்தியப் பேரரசு தீர்மானித்துக் கொள்ளட்டும்.

3. தமிழக கடல் பகுதியில் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் மீன்பிடி தொழிலை செய்து வந்துள்ளனர். இங்கு தமிகத்திற்கு சொந்தமாக இருந்து வந்த கச்சத்தீவை இந்திய ஏகாதிபத்திய அரசானது தனது விரிவாதிக்க நோக்கங்களுக்காகவும், சிங்கள அரசினுடைய நட்புக்காகவும், சிங்கள அரசிற்கு தாரை வார்த்தது. இதனால் தமிழக மீனவர்கள் தங்களுடைய மீன்பிடி உரிமையை இழந்ததுடன் சிங்கள இனவெறி கூலிப்படையால் அடிக்கடி சுட்டுக் கொல்லப்படும் கொடுஞ்செயலுக்கு ஆளாகின்றனர். எனவே, தமிழக மீனவர்களை பாதுகாக்கும் பொருட்டும் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டிடவும் கச்சத்தீவு திரும்பப் பெறப்பட வேண்டும். அதுமட்டுமின்றி தமிழக கடல் பகுதியின் ஆளுகையும் தமிழக மீனவர்களின் உரிமையாக்கப்பட வேண்டும். இதற்குத் தடையாக உள்ள இந்திய - இலங்கை கச்சத்தீவு ஒப்பந்தம் இரத்து செய்யப்பட வேண்டும். அத்துடன் மீனவர்கள் தங்கள் மீன்பிடி தொழிலை அச்சமின்றி நடத்துவதற்கும், தங்கள் உயிரை தற்காத்துக் கொள்ளவும் தமிழக மீனவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

4. முல்லை பெரியாறு அணையில் 152 அடி நீரை தேக்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்த பிறகும் கூட அதை நிறைவேற்றாமல் புதிய அணை கட்டப்போவதாக அடாவடித்தனம் செய்து வருகிறது கேரள சி.பி.எம்.அரசு. அத்துடன் புதிய அணை கட்டுவதற்கான பணிகளையும் துவக்கிவிட்டது. கேரள சி.பி.எம். அரசின் இந்த அடாவடித் தனத்திற்கு இந்திய அரசு அனுமதி அளித்ததன் மூலம் தமிழகத்திற்கு துரோகம் இழைத்துள்ளது. அதே போன்று உச்சநீதிமன்றமும் விசாரணை நடத்துவதாக கூறி இழுத்தடித்து நாடகமாடி வருகிறது. அத்துடன் இல்லாமல் அணையில் நீரை தேக்குவது தொடர்பாக புதிய வழக்கு விசாரணை நடத்தப் போவதாகவும் கூறி இந்த துரோக நாடகத்தில் தனக்கும் பங்குள்ளது என்பதை வெளிப்படுத்தி உள்ளது. கருணாநிதி தலைமையிலான தமிழக அரசோ, தனது பதவி சுகத்திற்காக முல்லைபெரியாறு அணையில் உள்ள தமிழகத்தின் உரிமைகளை பலியிட்டு வருகிறது. கேரள அரசு, இந்திய அரசு, உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் கூட்டுச் சதியை இக்கூட்டம் வன்மையாக கண்டனம் செய்கிறது. முல்லைப் பெரியாறு அணையின் மீதான தமிழக உரிமைகளை மீட்டெடுக்க அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போராட இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

5. ஈழத்தின் மீதான சிங்கள இனவெறி அரசின் இன அழிப்புப் போரின்போது கடந்த மே மாதம் வரை ஒரு லட்சம் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். அதன் பின்னர் சிங்கள இனவெறியன் ராஜபக்சே அரசினால் 3 லட்சம் ஈழத் தமிழர்கள் சிறைபிடிக்கப்பட்டு முள்வேலி முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உணவு, உடை, இருப்பிடம், மருந்து என எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி அல்லலுற்று வருகின்றனர். முகாமில் உள்ளவர்களை அவர்களின் வரலாற்றுத் தாயகமான சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றுவதும், அதே இடங்களில் சிங்களவர்களை குடியேற்றுவதும்தான் சிங்கள இனவெறியன் ராஜபக்சேவின் திட்டமாகும். மேலும் முகாமில் உள்ள இளைஞர்கள், இளம் பெண்கள், குழந்தைகளைப் பிரித்து எடுத்து படுகொலை செய்கின்ற இன அழிப்பு நடவடிக்கைகளை ஹிட்லரின் யூதர் மீதான இனப்படுகொலையையும் விஞ்சி செய்கிறான். இவற்றை உலக நாடுகள் கைகட்டி, வாய் மூடி மௌனமாக வேடிக்கைப் பார்க்கின்றன. இக்கொடுஞ்செயல்களையும், உலகநாடுகளின் மௌனத்தையும் இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக ஈழத் தமிழர்கள் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு அவர்களின் சொந்த தாய் மண்ணில் குடியேற்றப்பட வேண்டும். அத்துடன் ஒரு லட்சம் ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே, பொன்சேகா தவிர அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து, அவர்களை பின்னணியிலிருந்து இயக்கிய சோனியா, மன்மோகன் சிங், கருணாநிதி கும்பல் மீதும் போர்க் குற்ற விசாரணை பகிரங்கமாக நடத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

6. தெற்காசியப் பகுதியில் இந்திய ஏகாதிபத்தியமானது விரிவாதிக்க வெளியுடன் பேட்டை ரவுடியாக வலம் வருகிறது. இதைத் தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்ள அண்டை நாடுகளில் ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளையும், போர் நடவடிக்கைகளையும் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் தலைமையிலான அரசைக் கவிழ்த்தது. ஈழத்தில் சிங்கள இனவெறி அரசுடன் கள்ளக் கூட்டு வைத்துக் கொண்டு இன அழிப்புப் போரில் ஈடுபட்டு ஒரு லட்சம் தமிழர்களை கொன்று குவித்தது. இந்திய ஏகாதிபத்தியத்தின் இத்தகைய விரிவாதிக்க வெறிக்கு எதிராக தமிழக உழைக்கும் மக்களும், இந்தியாவோடு அடிமைப்பட்டுக் கிடக்கும் பிற தேசிய இன உழைக்கும் மக்களும், தெற்காசிய பகுதி உழைக்கும் மக்களும் ஒன்றிணைந்து போராட முன்வருமாறு இக்கூட்டம்

கேட்டுக் கொள்கிறது.

Tuesday, November 24, 2009

தமிழக மீனவர்கள் பாதுகாப்புக்கு ஆயுதங்கள் வழங்கு !




தமிழர்களின் சொந்த கடற்பரப்பு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதிலிருந்து 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தமிழக கடற்பரப்பில் சிங்கள கடற்படையால் தொடர்ந்து சுட்டுக்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதனை கண்டித்து பேரணி பொதுக்கூட்டம் புரட்சிகர இளைஞர் முன்னணி தலைமையில், புரட்சிகர தொழிலாளர் முன்னணி , ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி , புரட்சிகர மாணவர்முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து திருவொற்றியூர் பகுதில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தினர்.
இப்பேரணி
22/11/2009
மாலை 4 மணி அளவில் சுங்கசாவடியிலிருந்து (திருவொற்றியூர்) தோழர்.எழிலன் தலைமையில் துவங்கியது , கடலாரு பத்திரிக்கை ஆசிரியர் பேரணியை துவக்கிவைத்தார். இப்பேரணி நல்லதண்ணீர் ஒடைகுப்பம்,திருச்சினாங்குப்பம், ஒண்டிகுப்பம், திருவொற்றியூர்குப்பம் வழியாக பெரியார் நகரில் (திருவொச்ற்றியூர்) முடிவுற்றது. பேரணி முடிவில் மாலை 6 மணிக்கு தோழர்.தென்கனல் தலைமையில் நடைபெற்றது பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்திய அரசே!
*சிங்கள இனவெறி அரசுடனான தூதரக உறவுகளை இரத்து செய் !
*பொருளுதவிகளையும், ஆயுத உதவிகளையும் உடனே நிறுத்து !
*கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய் ! கச்சத்தீவை திரும்பப் பெறு !
தமிழக அரசே!
*தமிழக மீனவர்கள் பாதுகாப்புக்கு ஆயுதங்கள் வழங்கு !
*இந்திய - இலங்கை கச்சத்தீவு ஒப்பந்தத்தை நிராகரி !
தமிழக மக்களே!
*தமிழக மீனவர்களின் வாழ்வுரிமைக்கும், பாதுகாப்புக்கும் போராடுவோம் !
*சிங்கள, இந்திய அரசுகளின் தமிழின அழிப்புக் கொள்கையை முறியடிப்போம் !

மேற்கண்ட முழக்கங்கள் அடிப்படையில் தோழர்.தாமரை(புரட்சிகர தொழிலாளர் முன்னணி ), தோழர்.தமிழ்மணி(புரட்சிகர தொழிலாளர் முன்னணி ),தோழர்.மார்க்ஸ்(புரட்சிகர இளைஞர் முன்னணி),தோழர்.கபிலன்(புரட்சிகர மாணவர் முன்னணி),தோழர்.ஆனந்தன்(ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ,ராஜாமணி - நல்லதண்ணீர் ஒடைகுப்பம் மீனவ பஞ்சாயத்து ,ஆர்.சத்தியநாதன் - தலைவர் திருச்சினாங்குப்பம் மீனவபஞ்சாயத்து (திருவொற்றியூர்),எம்.மாசிலமணி - ஒண்டிகுப்பம் மீனவபஞ்சாயத்து (திருவொற்றியூர்),ஆர்.மணி - திருவொற்றியூர் மீனவபஞ்சாயத்து ,எம்.பழநி - நிர்வாகி பலகைதொட்டிகுப்பம் மீனவபஞ்சாயத்து,தோழர்.விஜயா - நல்லதண்ணீர் ஒடைகுப்பம்,மாசிலமணி - தாழங்குப்பம் மீனவபஞ்சாயத்து (எண்ணூர்),ராஜி - நிர்வாகி நெற்றுகுப்பம் மீனவபஞ்சாயத்து (எண்ணூர்),எம்.வரதன் - முகதுவாரகுப்பம் மீனவபஞ்சாயத்து (எண்ணூர்),சிந்தனைசிற்பி சிங்கரவேலர் பேரவை ( Ashok Leyland ),வா.வு.சி நகர் மீனவபஞ்சாயத்தார் ,பெரியகுப்பம் மீனவபஞ்சாயத்தார் (எண்ணூர்),சின்னகுப்பம் மீனவபஞ்சாயத்தார் (எண்ணூர்),காசிகுப்பம் மீனவபஞ்சாயத்தார் (எண்ணூர்)
ஆகியோர் கலந்து கொண்டனர். 7 கோடி மக்கள் கொண்ட தமிழர்கள் நம்மால் தமிழக மீனவர்கள் கொலை செய்யப்படுவதை நம்மால் தடுக்க இயலாத கையறுநிலையில் நாம் உள்ளோம். இதற்கு தமிழகத்திற்கு இறையாண்மை ஏதும் இல்லாததால்தான் நாம் அடிமைத்தனத்தில் உள்ளோம். அடிமையின் குரல் அம்பலம் ஏறாது. இந்திய 'இறையாண்மைக்கு' தமிழகத்தின் சொந்த இறையாண்மையைப் பலி கொடுத்துவிட்டு அடிமையாய் குரல் எழுப்பும் தமிழ் நாட்டின் குரல் டெல்லி ஏகாதிபத்தியத்தின் காதுகளில் ஏறாது.தெற்காசிய மண்டலத்தில் இந்தியாவின் தமிழர் விரோதக் கொள்கை முடிவுக்கு வர வேண்டும் என்றும் சிங்கள இனவெறி அரசுடனான தூதரக உறவுகளை இரத்து செய் யவும்,பொருளுதவிகளையும், ஆயுத உதவிகளையும் உடனே நிறுத்த வேண்டும் என்றும்,*கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய் ! கச்சத்தீவை திரும்பப் பெறு ! என்றும்,தமிழக அரசே!
*தமிழக மீனவர்கள் பாதுகாப்புக்கு ஆயுதங்கள் வழங்கு ! *இந்திய - இலங்கை கச்சத்தீவு ஒப்பந்தத்தை நிராகரி ! என்றும் தமிழக மக்களே! *தமிழக மீனவர்களின் வாழ்வுரிமைக்கும், பாதுகாப்புக்கும் போராடுவோம் ! *சிங்கள, இந்திய அரசுகளின் தமிழின அழிப்புக் கொள்கையை முறியடிப்போம் ! என பேசினார் .

இறுதியில் தோழர்.தமிழ்மாறன்(புரட்சிகர தொழிலாளர் முன்னணி) நன்றியுரையாற்றினார், இப்பேரணி பொதுக்கூட்டம் துவக்கம் மற்றும் முடிவில் பு.இ.மு, பு.தொ.மு, ஒ.ம.வி.மு, பு.மா.மு ஆகிய அமைப்பு தோழர்கள்,மீனவப்பெருங்குடிமக்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 2000 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர், இப்பொதுக்கூட்டத்தின் முடிவில் 6 கண்டன தீர்மானங்கள் நிறைவ்வேற்றபட்டது. இப்பேரணி பொதுக்கூட்டம் வாயிலாக திருவொற்றியூர் பகுதி மக்களிடையே புரட்சிகர எழுச்சியை
உண்டாககியது
இப்படிக்கு
தென்கடலான்
தமிழ்நாடு

Saturday, November 21, 2009

பேரணி- பொதுக்கூட்டம்


இந்திய அரசே!

* சிங்கள இனவெறி அரசுடனான உறவுகளை ரத்து செய்!
* பொருளுதவிகளையும் ஆயுத உதவிகளையும் உடனே நிறுத்து!
* கச்ச தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்! கச்ச தீவை திரும்பப்பெறு!


தமிழக அரசே!


* தமிழக மீனவர்கள் பாதுகாப்புக்கு ஆயுதங்கள் வழங்கு!
* இந்திய இலங்கை கச்சதீவு ஒப்பந்தத்தை நிராகரி!





தமிழக மக்களே!



* தமிழக மீனவர்களின் வாழ்வுரிமைக்கும் பாதுகாப்புக்கும் போராடுவோம்!
* சிங்கள இந்திய அரசுகளின் தமிழின அழிப்பு கொள்கையை முறியடிப்போம்!


ஆகிய முழக்கங்களை முன்வைத்து இன்று (22-11-2009) ஞாயிறு மாலை 4.00 மணி அளவில் சென்னை தண்டையார் பேட்டையை அடுத்த சுங்கச்சாவடி பேருந்துநிலையம் அருகே பேரணி தொடங்கி திருவொற்றியூர் பெரியார் நகர்பெரியார்சிலை அருகில் நிறைவடைகிறது. அதனை தொடர்ந்து மாலை 6.00 மணிக்கு பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது .

இங்ஙனம்

புரட்சிகர இளைஞர் முன்னணி
புரட்சிகர தொழிலாளர் முன்னணி
புரட்சிகர மாணவர் முன்னணி
ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி
சென்னை தொலைபேசி - 9940023345

Monday, October 26, 2009

முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும் -8

மலையாள இனவெறிக்கு எடுபிடிகளான தமிழக சி.பி.எம்.


முல்லைப் பெரியாறு அணை நீரிலிருந்து ஒரு ஏக்கர் அளவில் கூட கேரளம் விவசாயம் செய்யாத நிலையிலும், கேரள மக்களின் தேவைக்கு இந்நீரைப் பயன்படுத்தாத போதிலும் தமிழ்நாட்டிற்கு நீரைத் தர மறுப்பதோடு, அணை நீரை வீணாகக் கடலில் கலக்கும் வேலையைத்தான் கேரள சி.பி.எம். அரசு செய்து வருகின்றது. தமிழ்நாட்டின் விளை நிலங்களைத் தரிசாக்கிவிட்டு - தமிழ்நாட்டு உழவர்களை வேளாண்மை உற்பத்தியிலிருந்து விரட்டியடிக்கும் நோக்கத்தில் தான் விவசாயப் புரட்சி பேசும் சி.பி.எம். கட்சி தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்து கொண்டிருக்கிறது. கேரள சி.பி.எம். கட்சியின் இத்துரோகத்தனத்திற்கு எடுபிடியாகத் தமிழ் மாநில சி.பி.எம். கட்சியும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.


முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிடச் சென்ற தமிழ்நாட்டின் அமைச்சர் துரைமுருகனை கேரள சி.பி.எம். குண்டர்கள் முற்றுகையிட்டு இழிவாகவும், தரக்குறைவாகவும் திட்டியபோது, மலையாள இன வெறியுட்டும் கேரள சி.பி.எம். கட்சியின் தமிழர் விரோத நடவடிக்கையைக் கண்டிக்கக்கூட மறுத்தது தமிழ் மாநில சி.பி.எம். கட்சி. இதற்குக் காரணம், தமிழ்நாட்டில் எத்தனை முறை சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்தாலும், தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் நான்கைந்து உறுப்பினர்களை மட்டுமே தமிழ்நாட்டு சி.பி.எம். கட்சியால் பெறமுடியும். ஆனால், கேரளத்தில் முதல்வர் பதவியே பெறமுடியும். ஆக சி.பி.எம். கட்சியைப் பொறுத்தளவில் ஆட்சியைப் பிடிப்பது - பதவியைக் காப்பாற்றுவது ஒன்று மட்டும்தான் நோக்கம். இந்நோக்கத்தை நிறைவேற்றத்தான் இந்தியாவில் உள்ள எல்லா சி.பி.எம். கிளைகளின் செயல்பாடுகளும் அமைந்திருக்கின்றன.
தொடரும்...

Tuesday, October 20, 2009

முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும் -7

மலையாள இனவெறியைத் தூண்டிய கேரள சி.பி.எம்:

சர்வதேசத் தொழிலாளர்களின் ஒற்றுமை குறித்துப் பேசும் சி.பி.எம். கட்சிதான் தற்போது கேரளத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. விவசாயிகள் புரட்சி என்றும், தொழிலாளர் வர்க்கப் புரட்சி என்றும் வாயிகிழிய பேசிக்கொண்டிருக்கும் சி.பி.எம். கட்சி கேரளத்தின் எதிர் கட்சியாக இருந்தபோது முல்லை பெரியாறு அணை குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை கடந்த 27-02-2006 இல் வழங்கியது. அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி தலைமையிலான கேரள அரசு அத்தீர்ப்பை ஏற்க மறுத்துவிட்டது. மேலும் இத்தீர்ப்பைச் செல்லுபடியாக்கவிடாமல் தடுப்பதற்காகவே கேரளச் சட்டமன்றத்தில் 'கேரள அணைகள் பாதுகாப்புச் சட்டம்' ஒன்றை முன்மொழிந்தது. அச்சட்டத்தை எதிர்க் கட்சியாக இருந்த சி.பி.எம். கட்சி வழிமொழிந்தது. அதுமட்டும்மல்லாமல், உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு செய்தது. அதற்கடுத்துதான், சி.பி.எம். கட்சி ஆட்சிக்கு வந்தது. இதற்கிடையில் முல்லைப் பெரியாறு அணை குறித்து ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறுபடியும் உறுதி செய்யும் வகையில் 2006 ஆகஸ்ட்டு மாதத்தில் தீர்ப்பை வழங்கியது.


பல இலட்சம் தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரை நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க மறுத்துக் காலில் போட்டு மிதிக்கிறது மலையாள இனவெறி சி.பி.எம். அரசு. ஆனால் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதாக வேடங்கட்டும் இக்கட்சி, கொகோ கோலா ஆலை குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தலைவணங்கி வரவேற்றது. அதாவது, கேரளத்தின் பாலக்காடு அருகே பிலாசிமாடா எனும்மிடத்தில் அமைந்துள்ள அமேரிக்க ஏகாதிபத்தியத்தின் கொகோ கோலா ஆலையை எதிர்த்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கொகோ கோலாவுக்குச் சாதகமான வகையில் தீர்ப்பை வழங்கியது. இத்தீர்ப்பை சி.பி.எம். கட்சி துளியளவும் எதிர்க்கவில்லை, பல இலட்சம் மக்கள் பயன்பெரும் வகையில் வெளிவந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மறுப்பதும், ஏகாதிபத்திய நிறுவனங்கள் கொள்ளையடிக்கும் வகையில் வெளிவரும் தீர்ப்புகளை உச்சிமுகர்ந்து வரவேற்பதும்தான் சி.பி.எம். கட்ச்யின் சர்வதேசியமாக இருந்து கொண்டிருக்கிறது.

பாட்டாளி வர்க்க சர்வதேசியம் பேசித் திரியும் சி,பி.எம். கட்சி, மிக எளிய உண்மைகளைக்கூட கண்டு கொள்ள மறுக்கின்றது. உண்மைக்கு மாறாகப் பல பொய்யான செய்திகளையே கிளிப்பிள்ளை மாதிரி திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறது. முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் இடுக்கி உள்ளிட்ட அய்ந்து மாவட்ட மக்கள் கடலில் முழ்கி இறந்து விடுவார்கள் என்ற பொய்யான செய்திகளைத் திட்டமிட்டுப் பரப்பி விடுவதில் சி.பி.எம்.கட்சி கங்கணம் கட்டித் திரிகின்றது. உண்மை என்னவெனில், முல்லைப் பெரியாறு அணையின் உபரிநீர் வழிந்தோடும் பகுதி முழுவதும் அடர்ந்த வனப்பகுதியாகும். அப்பகுதியானது மக்கள் வாழும் பகுதி அல்ல என்பது முதல் உண்மை. அதுமட்டும்மல்லாமல், முல்லைப் பெரியாறு அணையானது கடல் மட்டத்திலிருந்து 2869 அடி உயரத்தில் உள்ளது. அணை நீரில் மூழ்கி விடுவதாகச் சொல்லப்படும் பகுதிகள் அனைத்தும் கடல் மட்டத்திலிருந்து 3500 அடி முதல் 4750 அடி வரையிலான உயரத்தில் உள்ளன. நீர் பள்ளமான பகுதியை நோக்கியே பாயிந்தோடும் என்ற எளிய உண்மையைக் கூட மறைத்து, கேரள மக்களிடையே பயபீதியை உருவாக்கி வருகின்றது கேரளாவின் சி.பி.எம். அரசு.

கேரள அரசு சொல்வதைப் போன்று அணை உடைவதாக ஒரு வாதத்திற்கு ஒப்புக் கொண்டாலும், முல்லைப் பெரியாறு அணையின் கொள்ளளவைக் (முழுக் கொள்ளளவு 15 டி.எம் சி.) காட்டிலும், பல அளவு கொள்ளளவு கொண்ட (70 டி.எம் சி.) இடுக்கி அணை முல்லைப் பெரியாறு அணைக்குக் கிழே கட்டப்பட்டு இருக்கிறது. ஒரு வேலை முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கூட அவ்வணையின் 15 டி.எம் சி. நீரும் 70 அடி டி.எம் சி. கொள்ளளவு கொண்ட இடுக்கி அனைக்குத்தான் போய்ச்சேரும். முல்லைப் பெரியாறு அணைக்கும் இடுக்கி அணைக்கும் இடைப்பட்ட இப்பகுதி மக்கள் குடியிருப்பு இல்லாத காட்டுப் பகுதியாகும். அதுமட்டும்மலாமல் இடுக்கி அணைக்குக் கிழே கேரள அரசால் கட்டப்பட்ட பத்து அணைகள் இருக்கின்றன. ஆக முல்லைப் பெரியாறு அணை உடைந்து-அதனால் இடுக்கி அணை உடைந்து அதற்கடுத் துள்ள பத்து அணைகளும் உடைந்து இடுக்கி உள்ளிட்ட அய்ந்து மாவட்டங்களில் வாழும் 35 இலச்சம் மக்கள் கடலில் மிதப்பது போன்ற கிராபிக்ஸ் வீடியோ காட்சிகளை இணைய தளத்திலும், உள்ளூர் கேபிள் தொலைக் காட்சிகளிலும், குருந்தகுடு களிலும் பரப்பிய 'கம்யூனிச மாமேதை' என சி.பி.எம். கட்சியினரால் புகழப்பட்ட அச்சுதானந்தன் தான் கேரள அரசின் தற்போதைய முதல்வர். "விட்டலாச்சாரியா" படங்களையும் மிஞ்சும் வகையில் சி.பி.எம். கட்சியினரால் அவிழ்த்துவிடப்பட்ட கிராபிக்ஸ் பொய்க் காட்சிகள் கொண்ட இப்படத்திற்கு, தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எம். கட்சியின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இந்த ஆண்டின் சிறந்த படமாகத் தேர்ந்தெடுத்து விருது கொடுத்தாலும் வியப்பதற்கில்லை.

கேரள சி.பி.எம். அரசின் முதல்வர் அச்சுதானந்தன் இன்னொரு கற்பனைப் புரட்டையும் அவிழ்த்துவிட்டுள்ளார். அதாவது முல்லைப் பெரியாறு அணை சுண்ணாம்புக் காறையால் கட்டப்பட்டது என்றும், இதன் ஆயுள் காலம் 50 ஆண்டுகளுடன் முடிந்துபோய்விட்டது என்றும் பென்னிக் குய்க் சொன்னதாக அச்சுதானந்தன் கூறுகிறார். அச்சுதானந்தன் இப்படிக் கூறுவது முழுக்க முழுக்க வடிகட்டிய அயோக்கிய பொய்த்தனம் ஆகும். பென்னிக் குய்க் எந்த ஒரு இடத்திலும் இப்படிக் குறிப்பிடவில்லை என்பது ஒருபுறமிருக்க, அச்சுதானந்தன் வாதப்படி 50 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட அணைகளை இடிக்க வேண்டும் என முடிவு செய்தால் இந்தியாவில் மட்டும்மல்ல உலகில் உள்ள பெரும்பாலான அணைகள் முழுவதயும் இடிக்கத்தான் நேரிடும். அச்சுதானந்தன் கூறுவது போல 50 ஆண்டுகளுக்கு முந்திய எந்த அணையும் பலவீனமாக இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடவில்லை. மேலும் முல்லைப் பெரியாறு கட்டப்பட்ட காலத்தில் அதே தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப்பட்ட பல அணைகள், ஆற்றுப் பாலங்கள் போன்றவை இன்றளவிலும் நல்ல நிலையில் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதே அடிப்படை உண்மையாகும்.
தொடரும்...