Sunday, September 25, 2011

முல்லைப்பெரியாறும் துரோகத்தின் வரலாறும் - 2

முல்லைப் பெரியாறு அணை கட்டிய வரலாறு :


தமிழகத்தின் நெல்லை மாவட்டம் சுந்தரமலையில் உள்ள சிவகிரி சிகரத்தில் தோன்றும் பெரியாறு. தன்னோடு பெருந்துறையாறு, சின்ன ஆறு, சிறு ஆறு, சிறுதோணி ஆறு, கட்டப்பனையாறு, இடமலையாறு, முல்லையாறு, ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டு சுமார் 300 கிலோ மீட்டர் வடமேற்குத் திசையில் பாய்ந்து இறுதியில் கொச்சி எர்ணாகுளம் அருகே கடலில் கலக்கிறது. பெரியாறு தற்போதைய தமிழக எல்லைக்குள் 56 கிலோ மீட்டர் தூரமும், தற்போதைய கேரள எல்லைக்குள் 244 கிலோ மீட்டர் தூரமும் பாயிகின்றது. அடர்ந்த வனப்பகுதிகளின் வழியாகப் பாய்ந்தோடும் பெரியாற்றின் சமவெளிப் பகுதி வெறும் 25 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே.


பெரியாற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் சூன், சூலை, ஆகஸ்ட்டு மாதங்களில் தென்மேற்குப் பருவ மழையும், அக்டோபர், நவம்பர், திசம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவ மழையும் பொழிவதால் ஆண்டின் பெரும்பகுதிக்காலம் பெரியாற்றில் வெள்ளம் வழிந்தோடுகிறது. இது ஒருபுறமிருக்க,
'கோள்நிலை திரிந்து கோடை நீடினும்

தான் நிலை திரியா தண்டமிழ்ப் பாவை'
என பழந்தமிழ் இலக்கியங்களால் குறிக்கப்பெறும் வைகை ஆறு மதுரை. சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளை வலப்படுத்திவந்தது. 18 மற்றும் 19 ஆம் நுற்றாண்டுகளில் வைகை ஆறும் பொய்த்துப்போனது. இதனால் வேளாண்மை உற்பத்தி சீர்குலைந்தது.வேளாண்மைத் தொழிலை மேற்கொண்ட இப்பகுதி மக்கள் வறட்சியின் கோரப் பிடிக்குள் சிக்குண்டு பஞ்சத்தாளும் பசியாலும் பட்டினியாலும் பல்வேறு இன்னல்களைச் சந்திக்க நேரிட்டது. இந்நிலையில் இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கும் வேளாண்மை உர்ப்பத்தித் தேவைக்கும் ஆற்று நீரையே பயன் படுத்த வேண்டிய கட்டாயம் இருந்த காரத்தினால். அபோதைய இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் மற்றும் அமைச்சர் முத்து இருளப்பர் ஆகியோர், பெரியாற்றில் இருந்து கால்வாய் வெட்டி - மேற்கு நோக்கிச் செல்லும் ஆற்று நீரை தென் தமிழகம் நோக்கித் திருப்பிக் கொண்டுவருவது பற்றி ஆராய 1798 இல் ஒரு குழுவை அமைத்தனர். இகுழு அளித்த திட்டத்தை போதிய நிதி இல்லாத காரணத்தால் சேதுபதி மன்னர்களால் நிறைவேற்ற முடியவில்லை. இதன் பிறகுதான் ஆங்கிலேயர்கள் மேற்குறித்த திட்டம் குறித்து ஆய்வு செய்யத் தொடங்கியதோடு, அத்திட்டத்தை நிறைவேற்றவும் அக்கறை காட்டினர்.


1808 இல் ஜேம்ஸ் கால்டுவெல் என்பவர் அணை கட்டும் திட்ட ஆய்வைச் செய்துள்ளார். 1850 இல் முல்லையாற்றில் அணை கட்டும் முயற்ச்சியானது, அப்பகுதியில் தொற்று நோய் பரவியதன் காரணமாக நின்று போனது. பின்னர் 1862 இல் 162 உயர அணை கட்டும் திட்டம் மேஜர் ரைவீஸ் மற்றும் மேஜர் பேயின் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. இத்திட்டம் குறித்து மேலும் ஆராய்வதற்காக 1868 இல் கர்னல் ஜெ. பென்னி குயிக் என்பவரை அப்போதைய ஆங்கில அரசாங்கம் நியமித்தது. இதற்கிடையில், 1870 இல் பென்னி குயிக் மாற்றப்பட்டு இத்திட்டத்தை நிறைவேற்ற ஸ்மித் என்பவர் நியமிக்கப்பட்டார். 175 அடி உயரத்தில் அணை கட்டும் திட்டத்தை அவர் முன்மொழிந்தார். இத்திட்டத்தை ஆராய்ந்த ஆங்கிலேய அரசு அதை நிறை வேற்றும் பொறுப்பை திரு.பென்னி குயிக்கிடம் 1882 இல் மீண்டும் வழங்கியது. உரூ.65 இலச்சம் மதிப்பீட்டில் அணை கட்டும் திட்டம் இறுதியாக்கப்பட்டது.


முல்லை ஆறும், பெரியாரும் இணையும் இடத்திற்கு அருகே அணை கட்ட முடிவு எடுக்கப்பட்டது அணை கட்டப்பட விருந்த இப்பகுதியானது முழுவதுமான தமிழர் பகுதியாகும். தேவிகுளம், பீர்மடு போன்ற பகுதிகள் தமிழர்கள் வாழ்ந்து வந்த பகுதியாகும். இன்றளவும் அப்பகுதிகளில் தமிழர்களே பெரும்பான்மையாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அணை கட்டப்படவிருக்கும் இப்பகுதியிலிருந்து சுமார் 62 கிலோமீட்டர் தொலைவுவரை தமிழ்நாட்டு எல்லைப்பகுதி அமைந்திருந்தது. இதற்க்குபின்புதான் கொட்டாரக்கரை அடூர் போன்ற பகுதிகள் கொண்ட அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான எல்லை தொடங்குகிறது. இருப்பினும் அணை கட்டப்படவுள்ள பகுதி தமிழ்நாட்டு பகுதியா, திருவிதாங்கூர் சமஸ்தான பகுதியா என்பதில் தெளிவில்லாத ஆங்கிலேய அரசாங்கம். ஆணை கட்டப்படவுள்ள பகுதி திருவிதாங்கூர் சமஸ்தான பகுதி என்பதாகக் கொண்டு, 1886 அக்டோபர் 28 இல் திருவிதாங்கூர் சமஸ்த்தானத்துடன் 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தைச் செய்துகொண்டது. இவ்வொப்பந்தப்படி அணை நீரால் மூழ்கும் 8000 ஏக்கர் நிலமும் பராமரிப்புக்கான 100 ஏக்கர் நிலமும், அணையில் தேங்கும் நீரும். அணையின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பும், படகு மற்றும் சாலை போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் தமிழ்நாட்டிற்குச் சொந்தமாகும். புதிதாக கட்டப்பட்டுள்ள இவ்வணை நீரானது தமிழ்நாட்டிற்குத் தொடர்ந்து காலம்காலமாகக் கிடைக்கச் செய்யவேண்டும் என்ற நோக்கத்திற்காக 999 ஆண்டுகள் ஒப்பந்த்தம் போடப்பட்டாலும் இந்த ஒப்பந்த்த காலம் முடியும் தருவாயில் மீண்டும் 999 ஆண்டுகள் ஒப்பந்த்தம் செய்து கொள்வதற்கான உறுதிமொழியையும் திருவிதாங்கூர் சமஸ்த்தானத்திடமிருந்து ஆங்கிலேய அரசாங்கம் மேற்படி ஒப்பந்தத்திலேய பெற்றிருக்கிறது. ஆக அப்பகுதியில் கட்டப்படும் அணை நீரானது எல்லா காலத்திற்கும் தமிழ்நாட்டிற்கு வரவேண்டும் என்பதுதான் அணை கட்டப்படுவதன் நோக்கமும் ஒப்பந்தத்தின் சாரமும்மாகும்.

தொடரும்...

No comments:

Post a Comment