Monday, October 26, 2009

முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும் -8

மலையாள இனவெறிக்கு எடுபிடிகளான தமிழக சி.பி.எம்.


முல்லைப் பெரியாறு அணை நீரிலிருந்து ஒரு ஏக்கர் அளவில் கூட கேரளம் விவசாயம் செய்யாத நிலையிலும், கேரள மக்களின் தேவைக்கு இந்நீரைப் பயன்படுத்தாத போதிலும் தமிழ்நாட்டிற்கு நீரைத் தர மறுப்பதோடு, அணை நீரை வீணாகக் கடலில் கலக்கும் வேலையைத்தான் கேரள சி.பி.எம். அரசு செய்து வருகின்றது. தமிழ்நாட்டின் விளை நிலங்களைத் தரிசாக்கிவிட்டு - தமிழ்நாட்டு உழவர்களை வேளாண்மை உற்பத்தியிலிருந்து விரட்டியடிக்கும் நோக்கத்தில் தான் விவசாயப் புரட்சி பேசும் சி.பி.எம். கட்சி தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்து கொண்டிருக்கிறது. கேரள சி.பி.எம். கட்சியின் இத்துரோகத்தனத்திற்கு எடுபிடியாகத் தமிழ் மாநில சி.பி.எம். கட்சியும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.


முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிடச் சென்ற தமிழ்நாட்டின் அமைச்சர் துரைமுருகனை கேரள சி.பி.எம். குண்டர்கள் முற்றுகையிட்டு இழிவாகவும், தரக்குறைவாகவும் திட்டியபோது, மலையாள இன வெறியுட்டும் கேரள சி.பி.எம். கட்சியின் தமிழர் விரோத நடவடிக்கையைக் கண்டிக்கக்கூட மறுத்தது தமிழ் மாநில சி.பி.எம். கட்சி. இதற்குக் காரணம், தமிழ்நாட்டில் எத்தனை முறை சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்தாலும், தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் நான்கைந்து உறுப்பினர்களை மட்டுமே தமிழ்நாட்டு சி.பி.எம். கட்சியால் பெறமுடியும். ஆனால், கேரளத்தில் முதல்வர் பதவியே பெறமுடியும். ஆக சி.பி.எம். கட்சியைப் பொறுத்தளவில் ஆட்சியைப் பிடிப்பது - பதவியைக் காப்பாற்றுவது ஒன்று மட்டும்தான் நோக்கம். இந்நோக்கத்தை நிறைவேற்றத்தான் இந்தியாவில் உள்ள எல்லா சி.பி.எம். கிளைகளின் செயல்பாடுகளும் அமைந்திருக்கின்றன.
தொடரும்...

Tuesday, October 20, 2009

முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும் -7

மலையாள இனவெறியைத் தூண்டிய கேரள சி.பி.எம்:

சர்வதேசத் தொழிலாளர்களின் ஒற்றுமை குறித்துப் பேசும் சி.பி.எம். கட்சிதான் தற்போது கேரளத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. விவசாயிகள் புரட்சி என்றும், தொழிலாளர் வர்க்கப் புரட்சி என்றும் வாயிகிழிய பேசிக்கொண்டிருக்கும் சி.பி.எம். கட்சி கேரளத்தின் எதிர் கட்சியாக இருந்தபோது முல்லை பெரியாறு அணை குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை கடந்த 27-02-2006 இல் வழங்கியது. அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி தலைமையிலான கேரள அரசு அத்தீர்ப்பை ஏற்க மறுத்துவிட்டது. மேலும் இத்தீர்ப்பைச் செல்லுபடியாக்கவிடாமல் தடுப்பதற்காகவே கேரளச் சட்டமன்றத்தில் 'கேரள அணைகள் பாதுகாப்புச் சட்டம்' ஒன்றை முன்மொழிந்தது. அச்சட்டத்தை எதிர்க் கட்சியாக இருந்த சி.பி.எம். கட்சி வழிமொழிந்தது. அதுமட்டும்மல்லாமல், உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு செய்தது. அதற்கடுத்துதான், சி.பி.எம். கட்சி ஆட்சிக்கு வந்தது. இதற்கிடையில் முல்லைப் பெரியாறு அணை குறித்து ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறுபடியும் உறுதி செய்யும் வகையில் 2006 ஆகஸ்ட்டு மாதத்தில் தீர்ப்பை வழங்கியது.


பல இலட்சம் தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரை நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க மறுத்துக் காலில் போட்டு மிதிக்கிறது மலையாள இனவெறி சி.பி.எம். அரசு. ஆனால் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதாக வேடங்கட்டும் இக்கட்சி, கொகோ கோலா ஆலை குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தலைவணங்கி வரவேற்றது. அதாவது, கேரளத்தின் பாலக்காடு அருகே பிலாசிமாடா எனும்மிடத்தில் அமைந்துள்ள அமேரிக்க ஏகாதிபத்தியத்தின் கொகோ கோலா ஆலையை எதிர்த்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கொகோ கோலாவுக்குச் சாதகமான வகையில் தீர்ப்பை வழங்கியது. இத்தீர்ப்பை சி.பி.எம். கட்சி துளியளவும் எதிர்க்கவில்லை, பல இலட்சம் மக்கள் பயன்பெரும் வகையில் வெளிவந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மறுப்பதும், ஏகாதிபத்திய நிறுவனங்கள் கொள்ளையடிக்கும் வகையில் வெளிவரும் தீர்ப்புகளை உச்சிமுகர்ந்து வரவேற்பதும்தான் சி.பி.எம். கட்ச்யின் சர்வதேசியமாக இருந்து கொண்டிருக்கிறது.

பாட்டாளி வர்க்க சர்வதேசியம் பேசித் திரியும் சி,பி.எம். கட்சி, மிக எளிய உண்மைகளைக்கூட கண்டு கொள்ள மறுக்கின்றது. உண்மைக்கு மாறாகப் பல பொய்யான செய்திகளையே கிளிப்பிள்ளை மாதிரி திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறது. முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் இடுக்கி உள்ளிட்ட அய்ந்து மாவட்ட மக்கள் கடலில் முழ்கி இறந்து விடுவார்கள் என்ற பொய்யான செய்திகளைத் திட்டமிட்டுப் பரப்பி விடுவதில் சி.பி.எம்.கட்சி கங்கணம் கட்டித் திரிகின்றது. உண்மை என்னவெனில், முல்லைப் பெரியாறு அணையின் உபரிநீர் வழிந்தோடும் பகுதி முழுவதும் அடர்ந்த வனப்பகுதியாகும். அப்பகுதியானது மக்கள் வாழும் பகுதி அல்ல என்பது முதல் உண்மை. அதுமட்டும்மல்லாமல், முல்லைப் பெரியாறு அணையானது கடல் மட்டத்திலிருந்து 2869 அடி உயரத்தில் உள்ளது. அணை நீரில் மூழ்கி விடுவதாகச் சொல்லப்படும் பகுதிகள் அனைத்தும் கடல் மட்டத்திலிருந்து 3500 அடி முதல் 4750 அடி வரையிலான உயரத்தில் உள்ளன. நீர் பள்ளமான பகுதியை நோக்கியே பாயிந்தோடும் என்ற எளிய உண்மையைக் கூட மறைத்து, கேரள மக்களிடையே பயபீதியை உருவாக்கி வருகின்றது கேரளாவின் சி.பி.எம். அரசு.

கேரள அரசு சொல்வதைப் போன்று அணை உடைவதாக ஒரு வாதத்திற்கு ஒப்புக் கொண்டாலும், முல்லைப் பெரியாறு அணையின் கொள்ளளவைக் (முழுக் கொள்ளளவு 15 டி.எம் சி.) காட்டிலும், பல அளவு கொள்ளளவு கொண்ட (70 டி.எம் சி.) இடுக்கி அணை முல்லைப் பெரியாறு அணைக்குக் கிழே கட்டப்பட்டு இருக்கிறது. ஒரு வேலை முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கூட அவ்வணையின் 15 டி.எம் சி. நீரும் 70 அடி டி.எம் சி. கொள்ளளவு கொண்ட இடுக்கி அனைக்குத்தான் போய்ச்சேரும். முல்லைப் பெரியாறு அணைக்கும் இடுக்கி அணைக்கும் இடைப்பட்ட இப்பகுதி மக்கள் குடியிருப்பு இல்லாத காட்டுப் பகுதியாகும். அதுமட்டும்மலாமல் இடுக்கி அணைக்குக் கிழே கேரள அரசால் கட்டப்பட்ட பத்து அணைகள் இருக்கின்றன. ஆக முல்லைப் பெரியாறு அணை உடைந்து-அதனால் இடுக்கி அணை உடைந்து அதற்கடுத் துள்ள பத்து அணைகளும் உடைந்து இடுக்கி உள்ளிட்ட அய்ந்து மாவட்டங்களில் வாழும் 35 இலச்சம் மக்கள் கடலில் மிதப்பது போன்ற கிராபிக்ஸ் வீடியோ காட்சிகளை இணைய தளத்திலும், உள்ளூர் கேபிள் தொலைக் காட்சிகளிலும், குருந்தகுடு களிலும் பரப்பிய 'கம்யூனிச மாமேதை' என சி.பி.எம். கட்சியினரால் புகழப்பட்ட அச்சுதானந்தன் தான் கேரள அரசின் தற்போதைய முதல்வர். "விட்டலாச்சாரியா" படங்களையும் மிஞ்சும் வகையில் சி.பி.எம். கட்சியினரால் அவிழ்த்துவிடப்பட்ட கிராபிக்ஸ் பொய்க் காட்சிகள் கொண்ட இப்படத்திற்கு, தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எம். கட்சியின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இந்த ஆண்டின் சிறந்த படமாகத் தேர்ந்தெடுத்து விருது கொடுத்தாலும் வியப்பதற்கில்லை.

கேரள சி.பி.எம். அரசின் முதல்வர் அச்சுதானந்தன் இன்னொரு கற்பனைப் புரட்டையும் அவிழ்த்துவிட்டுள்ளார். அதாவது முல்லைப் பெரியாறு அணை சுண்ணாம்புக் காறையால் கட்டப்பட்டது என்றும், இதன் ஆயுள் காலம் 50 ஆண்டுகளுடன் முடிந்துபோய்விட்டது என்றும் பென்னிக் குய்க் சொன்னதாக அச்சுதானந்தன் கூறுகிறார். அச்சுதானந்தன் இப்படிக் கூறுவது முழுக்க முழுக்க வடிகட்டிய அயோக்கிய பொய்த்தனம் ஆகும். பென்னிக் குய்க் எந்த ஒரு இடத்திலும் இப்படிக் குறிப்பிடவில்லை என்பது ஒருபுறமிருக்க, அச்சுதானந்தன் வாதப்படி 50 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட அணைகளை இடிக்க வேண்டும் என முடிவு செய்தால் இந்தியாவில் மட்டும்மல்ல உலகில் உள்ள பெரும்பாலான அணைகள் முழுவதயும் இடிக்கத்தான் நேரிடும். அச்சுதானந்தன் கூறுவது போல 50 ஆண்டுகளுக்கு முந்திய எந்த அணையும் பலவீனமாக இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடவில்லை. மேலும் முல்லைப் பெரியாறு கட்டப்பட்ட காலத்தில் அதே தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப்பட்ட பல அணைகள், ஆற்றுப் பாலங்கள் போன்றவை இன்றளவிலும் நல்ல நிலையில் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதே அடிப்படை உண்மையாகும்.
தொடரும்...

Sunday, October 18, 2009

முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும் -6

முல்லைப் பெரியாறு பலப்படுத்தப்பட்ட வரலாறு- 2

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 1978 இல் 145 அடியாகவும் 1979 முதல் 136 அடியாகவும் குறைக்கப்பட்டதால், ஒரு போகம் மட்டுமே சாகுபடி செய்த சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளில் சுமார் 40,000 ஏக்கர் நிலம் தரிசாக மாறியது. காலங்காலமாக வறட்சியால் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்கள் தங்கள் நிலங்கள் தரிசாகக் கிடப்பதைப் போட்டுவிட்டு, பிழைப்பு தேடி சொந்த மண்ணையும் விட்டு வெளியேறி பெரு நகரங்களுக்கும், வெளிமாநிலத்திற்கும், வெளிநாடுகளுக்கும் சென்று, மிகக் குறைந்த கூலிக்குக் கொத்தடிமைகளைப் போல வேலை செய்து, அகதியைப் போல வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதோடு, இரு போகம் சாகுபடி செய்த ஒரு இலச்சம் ஏக்கர் நிலங்கள் ஒரு போகம் சாகுபடியாக மாறியது. இம்மாவட்டங்களின் நிலத்தடி நீர் மட்டமும் அதல பாதாளத்திற்குச் சென்றுவிட்டது. மேலும் இப்பகுதி மக்களின் குடிநீர்த் தேவைக்குக் கூட நீரில்லாமல் குளம், கண்மாயி, ஏரிகள் அனைத்தும் வறண்டு போயிக் கிடக்கின்றன. பல கோடி ரூபாய் செலவில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

1979 இல் மத்திய நீர்வள ஆணையத்தின் முன்னிலையில் இரு மாநில அரசுகளும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்தும் பணிகளை 1985 லேயே முடித்த பின்பும் அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவதர்க்குக் கேரள அரசுகள் மறுத்து வந்தன. இதனால் கால் நூற்றாண்டு காலமாகப் பாதிக்கப்பட்ட உழவர்கள் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையை உச்ச நீதி மன்றத்திற்குக் கொண்டு சென்றனர்.

மத்திய நீர்வள ஆணையம், மத்திய மண் விசையியல் ஆராய்ச்சி நிலையம், ஆகியவற்றைச் சார்ந்த தலைசிறந்த நிபுணர்கள் அணையைப் பார்வையிட்டதற்குப் பின்பாக, அணையைப் பலப்படுத்தும் பணிகள் முடிந்துள்ளன என்று சான்று வழங்கியதோடு, அணையின் நீர் மட்டத்தை உயர்த்தகூடாது என்பதற்கு கேரள அரசால் சொல்லப்பட்டக் காரணங்கள் அனைத்தும் பொய்யானவையே எனக்கூரி நிராகரித்தனர். அணையின் நீர்மட்டத்தை முதற்கட்டமாக 145 அடிக்கு உயர்த்துவதால் அணைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் அந்நிபுணர்கள் கூரிவிட்டனர். இதன் அடிப்படையில்தான் கடந்த 27-02-2006 அன்று "முல்லை பெரியாறு அணையில் 142 அடிவரை நீரைத் தேக்கலாம்" என உச்ச நீதிமன்றம் தீர்ப்பும் வழங்கியுள்ளது. ஆனாலும், கேரள அரசு 1979 இல் தமிழ்நாட்டுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறுவதோடு, நிபுனர்க் குழுக்களின் அறிக்கையையும் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மதித்துச் செயல்படுத்த மறுக்கிறது. முல்லைப் பெரியாறு அணையில் சட்ட வழியிலும், அறிவியல் வழியிலும், அறவழிப்பட்ட வகையிலும் தமிழ்நாட்டின் உரிமைகளை ஏற்க மறுத்து, சண்டித்தனம் செய்வதோடு, பழைய பொய் களையே கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு, கேரள மக்களிடம் பய பீதியை ஏற்படுத்தியும் இனவெறியை ஊட்டியும் வருகின்றது கேரள அரசு.
தொடரும்...

Thursday, October 15, 2009

முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும் -5

முல்லைப் பெரியாறு பலப்படுத்தப்பட்ட வரலாறு:

கேரள அரசு மற்றும் கேரள இனவெறிக் கட்சிகள் சொல்வதைப் போன்று முல்லைப் பெரியாறு அணைக்கு எவ்விதப் பாதிப்புகளும் ஏற்பட்டதில்லை. இனியும் பாதிப்புகள் வருவதாகத் தெரியவில்லை. அதாவது 1924, 1933, 1940, 1943, 1961, 1977 ஆகிய ஆண்டுகளில் அணையின் முழுக் கொள்ளளவான 152 அடிவரை நீரைத் தேக்கிவைத்த போதும் அணைக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை.மேலும் 1943 இல் மிக அதிகபட்சமாக 154 அடிவரை நீர் மட்டம் உயர்ந்த போதும் அணைக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது அணையானது பலமாகக் கட்டப்பட்டது என்றாலும் தமிழக அரசு இன்றைய கேரள மாநிலம் உருவாக்கப்படுவதற்கு முன்பே 1930,1933 ஆகிய ஆண்டுகளிலும், கேரள மாநிலம் பிரிக்கப்பட்டப் பிறகு 1960 ஆம் ஆண்டிலும் கேரள அரசுகள் சொல்லாமலேயே அணையைப் பலப்படுத்தும் பணிகளைச் செய்து கொண்டுதான் இருந்தது. இது ஒருபுறமிருக்க, 1976 இல் முல்லைப் பெரியாறு அணைக்குக் கிழே 40 கிலோமீட்டர் தொலைவில் 555 அடி உயரமுள்ள இடுக்கி அணையை 800 மெகாவாட் நீர் மின் உற்பத்திக்காகக் கட்டி எழுப்பியது கேரள அரசு. இடுக்கி அணை கட்டப்பட்டது முதல் இன்று வரையிலும் ஒரு முறைகூட முழுக் கொள்ளளவுக்கும் நிறையவில்லை. இந்த இடுக்கி அணை கட்டப்பட்ட பிறகுதான் கேரள அரசு தனது பொய்பபுறடடுகளை வேகமாகப் பரப்பி வந்தது.

1978 இல் அணை பலவீனமாகிவிட்டது என்று கேரள அரசு மீண்டும் புரளியைக் கிளப்பிவிட்டதால் அணையின் நீர் மட்டம் 145 அடியாகக் குறைக்கப் பட்டுவிட்டது. இதை தொடர்ந்து 1979 இல் பீர்மடு எம்.எல்.ஏவாக இருந்த கே.கே.தாமஸ் என்பவர் அணையின் நீர் மட்டத்தை மீண்டும் குறைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார். அப்போது அணையைப் பார்வையிட்ட மத்திய நீர்வள ஆணையத் தலைவர் 'அணை பலமாகவே உள்ளது, கேரள மக்களின் அச்சம் தேவையற்றது' எனக் கூறினார். இருப்பினும் கேரளத்தின் அச்சத்தைப் போக்குவதற்கு அணையைப் பலப்படுத்தும் பணிகளைக் கீழ்கண்டவாறு செய்யவேண்டும் என கேரள-தமிழ்நாடு அரசுகளிடையே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதற்கிடையில் அணையைப் பலப்படுத்தும் பணிகள் செய்து முடிக்கும் வரை அணையின் நீர் மட்டம் 136 அடியாகத் தற்காலிகமாகக் குறைக்கப்பட்டது. கேரள-தமிழ்நாடு அரசுகளிடையே செய்து கொண்ட ஒப்பந்தப்படி,

1. அணையின் மேற்புற கைப்பிடிச்சுவரின் உயரத்தைக் கூட்டுதல்.

2. 12 அடி அகலமுள்ள அணையின் மேற்புறத்தை 21 அடியாக மாற்றும் வகையில் கான்கீரிட் தொப்பி அமைத்தல்.(RCC Capping)

3. அணையை அதன் அடித்தளப் பாறையுடன் இரும்புக் கம்பி நங்கூரம் அமைத்துஇணைத்துக் கட்டுதல். (Cable Anchoring )

4. தற்போதுள்ள 144 அடி அகலமுள்ள அடித்தளத்துடன் புதியதாக 56 அடி அகலமுள்ள கான்கீரிட் சப்போர்ட் அணையை 145 அடி உயரம் வரை கட்டுதல்.

5. தற்போதுள்ள 36 அடி அகலம் 16 அடி உயரம் கொண்ட 10 நீர்ப்போக்கி மதகுகளுடன் கூடுதலாக 40 அடி அகலம் 16 அடி உயரம் உள்ள 3 மதகுகளை அமைத்தல்.

அணையை பலப்படுத்தும் பணிகளைச் கேரள ஒப்பந்தக்காரர்களைக் கொண்டே தமிழ்நாடு அரசு செய்து வந்தாலும், அப்பணிகளை முடிக்கவிடாமல் கேரள அரசுகள் இடையுறு செய்து வந்தன. இதன் காரணமாகவே மூன்று ஆண்டுகளில் முடிய வேண்டிய பணிகள் பல ஆண்டுக் கணக்கில் செய்ய வேண்டியதாகிப் போனது. இதற்கிடையில் பெரியாறு நீர் பிடிப்புப் பகுதிகளில் கெவி அணை, ஆணைத்தோடு அணை, கட்கி அணை, பம்பா அணை போன்ற அணைகளைக் கட்டியெழுப்பி முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்தையும் கேரள அரசுகள் குறைத்துவிட்டன.
தொடரும்...