Tuesday, January 17, 2012

முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும் -4

முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும் -4முல்லைப் பெரியாற்று நீரைத் திருட கேரள அரசுகள் சதி:
1956 இல் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழர்கள் காலங்காலமாக வாழ்ந்து வந்த தேவிகுளம், பீர்மேடு (முல்லைப் பெரியாற்று அணை அமைந்துள்ள பகுதி) போன்ற பகுதிகள் அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக கேரள மாநிலத்தோடு இணைக்கப்பட்டன. தமிழ்நாட்டுப் பகுதிகளான தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் கேரளப் பகுதிகள் தான் என்ற தோற்றத்தை உருவாக்குவதற்கு மலையாளிகளின் குடியேற்றத்தை அப்போதைய கேரள அரசு திட்டமிட்டு நடத்தியது. அதாவது இலங்கையில் சிங்கள இனவெறி அரசு, தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்கள மக்களை வலுக்கட்டாயமாக குடியமர்த்தித் தமிழீழத்தை ஆக்கிரமிப்பு செய்து வருவது போல, அப்போதைய கேரள முதல்வர் பட்டம் தாணுப்பிள்ளை என்பவர் கேரளச் சிறைகளில் இருந்த மலையாளக் கைதிகளை விடுவித்து, அவர்களுக்கு உருபாய் 5 ஆயிரமும் 5 ஏக்கர் நிலமும் கொடுத்து தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் குடியமர்த்தும் வேலைகளைச் செய்தார். தமிழ்நாட்டின் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் கேரளப் பகுதிகள்தான் என்பதைக் காட்டுவதற்காக மலையாளக் குடியேற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தன.இத்தகைய மலையாளக் குடியேற்றங்களுக்குப் பின்புதான் 1963 இல் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்ற புரளியை, கேரளாவின் மனோரமா இதழ் மூலம் மலையாள மக்களிடம் பரப்பி இனவெறியைத் தூண்டிவிட்டது கேரள அரசு. அன்று முதல் இன்று வரையிலும் தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில் மலையாள மக்களை குடியேற்றம் செய்தல், பெரியாறு அணை பலவீனமாக உள்ளது எனப் புரளியைக் கிளப்புதல், அணையினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற பயத்தை உருவாக்குதல், பெரியாற்றின் துணை ஆறுகளில் தடுப்பு அணைகளைக் கட்டுதல் தமிழகத்தின் எல்லைக்குள் உள்ள செண்பகவல்லி அணையை உடைத்தல், முல்லைப் பெரியாறு அணை நீர் தேங்கும் பகுதிகளை ஆக்கிரமித்து அரசுக் கட்டிடங்களைக் கட்டுதல், தனியார் பண முதலைகளுக்கு சொகுசு மாளிகைகளும் நட்சத்திர விடுதிகளும் கட்டுவதற்கு அனுமதியளித்தல், சுற்றச் சூழல் பாதிக்கப்படும், வன விலங்குகள் அழியும் எனப் பொய் கூறுதல். அணையைப் பலப்படுத்தும் பணிகளைச் செய்யவிடாமல் தடுத்தல், நிலநடுக்கத்தால் அணை உடைந்துவிடும் என்ற பீதியை உண்டாக்குதல், அணை உடைவது போன்றும், 35 இலச்சம் கேரள மக்கள் அரபிக் கடலில் மிதப்பது போன்றும் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ காட்சிகளை ஒளிபரப்புதல் போன்ற அடாவடித் தனங்களை 1956 முதல் இன்று வரை கேரளத்தை ஆண்டுவரும் மார்க்சிய கம்யுனிஸ்ட் (சி.பி.எம்) கட்சியும், காங்கிரசுக் கட்சியும் மற்றுமுள்ள கேரளாவின் உதிரிக் கட்சிகளும் செய்து வருகின்றன. 'அணைக்கு ஆபத்து' 'அணையால் ஆபத்து' என்று ஒரே குரலில் திரும்பத் திரும்ப பொய் சொல்லி வருகின்றன.

தொடரும்...

Monday, October 10, 2011

முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும் -3

முல்லைப் பெரியாறு அணை தமிழர்களின் பொறியியல் - தொழில் நுட்பச் சாதனை
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வேளாண்மைக்குத் தேவையான நீர்ப்பாசனக் கட்டமைப்பை உருவாக்குவதில் தமிழர்கள் தலைசிறந்து விளங்கி வருகின்றனர். நீர்ப்பாசனப் பொறியியல், நீர்ப்பாசனப் பயன்பாட்டு நிர்வாகம் என இரு துறைகளில் சிறந்து விளங்கி வருவதற்குத் தமிழகத்தில் உள்ள 39 ஆயரம் ஏரிகளும், குளங்களும், கண்மாய்களும் சான்றாக உள்ளன. இதுமட்டும்மல்லாது அனைக்கட்டுக்களை உருவாக்குவதிலும் தமிழர்கள் உலகத்திற்கே முன்னோடியாக இருந்த்துள்ளனர் என்பதற்குச் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் கரிகாலன் காலத்தில் கட்டப்பட்ட கல்லணை கம்பீரத்துடன் நிலைத்து நின்று பயன்பட்டுக் கொண்டிருப்பதைக் கூறலாம். ஆங்கிலேயர்கள் தமது ஆட்சிக் காலத்தில் கட்டியெழுப்பிய அணைக் கட்டுமானங்களுக்குக் கல்லணையின் கட்டுமானமே அடிப்படையாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். அதனால்தான் பேயர்டு ஸ்மித் தனது (lrrigation in south india) நூலில் (1853) "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய இந்த அணை மிகச்சிறந்த பொறியியல் சாதனை எனக் கூறிப்பிட்டார்.


மேலும் 1874 இல் கோதாவரி ஆற்றில் தெளலீஸ்வரம் அணையைக் கட்டிய ஆர்தன் காட்டன் தனது நூலில் "ஆழம் காண இயலாத மணற்படுகையில் எப்படி அடித்தளம் அமைப்பது என்ற தொழில் நுட்பத்தை இவர்களிடமிருந்து (கல்லணையைக் கடியவர்களிடம்) தான் நாம் தெரிந்து கொண்டோம். இந்த பாடத்தைப் பயன்படுத்தி ஆற்றுப்பாலங்கள், அணைக்கட்டுகள் போன்ற நீரியல் கட்டுமானங்களைக் கட்டினோம்... எனவே இந்த மகத்தான சாதனை புரிந்த பெயர் தெரியாத அந்நாளைய மக்களுக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். ஆக ஆற்றைத் தடுத்து அணை கட்டி அந்நீரை வேளாண்மைக்குப் பயன் படுத்திய தொழில் நுட்பமும் நிர்வாகமும் தமிழ் வசம் நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே கைவரப்பெற்ற ஒன்றாகும் எனலாம்.
பொதுவாக ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணைகளில் தேக்கிவைக்கப்படும் தண்ணீரில் பாசனத்திற்காக வெளியேறும் நீரும், வெள்ளம் வரும் காலத்தில் உபரி நீரும் மதகுகள் வழியே அணையிலிருந்து வழிந்தோடும்வகையில் அமைந்திருக்கும். ஆனால் முல்லைப் பெரியாறு அணைத் திட்டமானது, மேற்கு நோக்கி பாயிந்தோடும் ஆற்று நீரை அணைகட்டித் தேக்கி வைத்து அந்நீரை ஆற்றின் எதிர் திசையில் கிழக்கு நோக்கி மலையைக் குடைந்து சுரங்கம் தோண்டி, அதன் வழியாக கொண்டுவந்து வைகை ஆற்றோடு முல்லைப் பெரியாற்று நீரை இணைக்கும் நோக்கத்தோடுதான் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது. ஓர் ஆற்றுப் படுக்கையிலிருந்து மற்றோர் ஆற்றுப் படுகைக்கு நீரைத் திருப்பும் இத்திட்டம் உலகிலேய முதலாவது எனக் கருதலாம். இவ்வாறான முல்லைப் பெரியாறு அணை வெகு சீக்கிரமாகவோ, வெகு சுலபமாகவோ, எவ்வித பாதிப்பும் இன்றியோ கட்டப்படவில்லை. மாறாக பல்வேறு இடர்பாடுகளையும் உயிர் இழப்புகளையும் கடந்துதான் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது.முல்லைப் பெரியாறு பகுதிகள் யாவும் அடர்ந்த வனப் பகுதியாகும். கொடிய விலங்குகள் மற்றும் மலேரியா, காலரா, முடக்குவாதம் போன்ற நோய்கள் பரவும் தட்பவெப்பச் சூழல்களைக் கொண்ட பகுதியாகும். திடிரென வருகின்ற காட்டாற்று வெள்ளம் அணைக் கட்டுமானங்களை அடித்துச் சென்றதோடு, அப்பணியில் ஈடுபட்டுருந்த ஊழியர்களையும் அடித்துச் சென்றிருக்கிறது.


முல்லைப் பெரியாறு அணையின் வேலைகள் பாதியளவு முடிவடைந்தநிலையில் 1890 இல் பெரியாற்றில் வந்த பெரு வெள்ளமானது அணைக் கட்டுமானம் அனைத்தையும் உடைத்துச் சென்றுவிட்டது. ஆகவே இந்த அணையைக் கட்டும் திட்டத்தைக் கைவிடுவதாக ஆங்கிலேயே அரசு அறிவித்தது. ஆனாலும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டுவதில் பென்னிக் குயிக் உறுதியாக இருந்தார். ஆணை கட்டும் செலவினங்களுக்காக இங்கிலாந்து சென்று தனது சொத்துக்களையெல்லாம் விற்று விட்டு, அதில் கிடைத்த 85 இலச்சம் ரூபாயையும் செலவழித்துத்தான் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடிக்கிறார். பென்னிக் குயிக். இரண்டாவது முறையாக அணை கட்டும் போது அணையானது வெள்ளத்தில் உடையாமல் இருக்க 185 இடங்களில் தடுப்பு அணைகளைக் கட்டினார். அதோடு முல்லைப் பெரியாறு அணையின் இடது புறம் கால்வாய் வெட்டி தண்ணீரைத் திருப்பி விட்டார். அணை முழுவதும் கட்டி முடிக்கப்பட்டவுடன் இடது புறம் வெட்டப்பட்ட கால்வாயில் 240 அடி நீளமுள்ள சிற்றனை (பேபி டேம் ) ஒன்றையும் கட்டி முடித்தார்.


1241 அடி நீளத்தில் (சுமார் அரை கிலோமீட்டர் தூரம்) மிகப்பெரிய அளவில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் அடித்தளத்திலிருந்து 172 அடியாகும். இதில் நீரைத் தேக்கும் உயரம் 155 அடியாகும். திடீரென வரும் வெள்ளத்தையும் சமாளிக்கும் வகையில் 152 அடிவரை மட்டுமே நீர் தேக்கப்பட்டு வருகின்றது. இவ்வனையானது நீர்த் தேங்கும் பகுதியில் செங்குத்தாகவும், அதற்குத் எதிர்ப்புறம் காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் சரிவாகவும் கட்டப்பட்டிருக்கிறது. இதனால் 172 அடி உயரமுள்ள அணையின் மேற்புறம் 12 அடி அகலத்திலும் அடித்தளம் 144 அடி அகலத்திலும் (மொத்த உயரத்தில் முக்கால் பங்கு அடித்தளம்) அமைக்கப்பட்டுள்ளது.


இந்த அணையில் தேங்கும் நீரிணை கிழக்கு திசையில் 5765 அடி நீளமும் (சுமார் 2 கிலோமீட்டர்). 60 அடி ஆழமும் 80 அடி அகலமும் கொண்ட பெரிய கால்வாய் மூலம் கொண்டு வந்து, பின்பு அந்நீரை மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட 5345 அடி நீளமும் 15 அடி அகலமும் கொண்ட சுரங்கத்தின் மூலம் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரப்படுகிறது. அதற்குப் பிறகு 78 கிலோமீட்டர் நீளமுள்ள பெரியாறு கால்வாய் மூலம் வைகை ஆற்றுடன் இணைக்கப்படுகிறது. அணையிலிருந்து மேற்குறிப்பிட்ட சுரங்கத்தின் வழியாக வினாடிக்கு 2000 கன அடி அளவு தண்ணீரை மட்டுமே வெளிய எடுக்கமுடியும். மேலும். 152 அடி உயரமுள்ள அணையில் 104 அடி வரை தேங்கும் நீரைத்தான் எடுக்க முடியும். 104 அடிக்குக் கீழே உள்ள நீரை எடுக்க முடியாது. ஏனென்றால் தண்ணீரைக் கொண்டுவறப் பயன்படுத்தும் சுரங்க வழியானது 104 அடி வரை உள்ள நீரிணை மட்டுமே எடுக்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, அணையின் மொத்த கொள்ளளவான 15 டி.எம்.சி. தண்ணீரில் 10 டி.எம்.சி. நீரை மட்டுமே அணையிலிருந்து வெளியே கொண்டுவரமுடியும். மீதமுள்ள 5 டி.எம்.சி. நீர் கிடப்பு நீராக (Dead Storage) அணைக்குள் இருக்கும். இவ்வாறாக உருவாக்கப்பட்ட முல்லைப் பெரியாறு அணையானது முழுவதும் முட்டுச் சுவரால் தடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் மற்ற அணைகளைப் போல அல்லாமல் நீர் தேங்குமிடம். உபரி நீர் வெளியேறுமிடம், தமிழ்நாட்டிற்கு நீர் வருமிடம் ஆகிய அனைத்தும் வெவ்வேறு இடங்களில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


முல்லைப் பெரியாறு அணை ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கட்டப்பட்டிருந்தாலும் அவ்வையின் தொழில்நுட்பமும் உழைப்பும் தமிழர்களுக்குச் சொந்தமானவை. பென்னிக் குயிக் மேற்கொண்ட பெருமுயற்சிக்கு உயிரோட்டம் தந்தவர்கள் தமிழர்கள்தான். அணையின் கட்டுமானப் பொருட்களும் தமிழ்நாட்டைச் சார்ந்ததுதான். அனைக்குத்தேவையான கட்டுமானக் கருவிகள் அனைத்தும் மதுரைப் பகுதியிலிருந்து கொண்டு செல்லப்பட்டவை. அணையின் இருபுறம் கருங்கற்கள், சுண்ணாம்பு, செங்கல் கடுக்காய், இஞ்சி, கருப்பட்டி, தேக்குமரப்பட்டை போன்ற பொருட்களையும் பயன்படுத்தித்தான் இன்வனை கட்டப்பட்டிருக்கிறது. முல்லைப் பெரியாறு அணை மிகப்பெரும் அளவிலான பொருட் செலவு மட்டுமின்றி மிகப்பெரும் அளவிலான உயிர்ச் சேதங்களையும் செலவாகக்கொண்டு கட்டப்பட்டிருக்கிறது. இந்நேரத்தில் நினைக்கப் படவேண்டியவர் பென்னிக் குயிக் மட்டுமல்ல, அவோரோடு சேர்ந்து உழைத்த தொழிலாளிகள், உயிர் நீத்த உழைப்பாளிகள் உடன் நின்ற அதிகாரிகளும்-உயிர் நீத்த அதிகாரிகளும்தான்.


முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு அவ்வணையின் நீர் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய அய்ந்து மாவட்ட மக்களின் வேளாண்மை மற்றும் குடிநீர்த் தேவைகள் ஓரளவு நிறைவேறின. மேலும் இம்மாவட்டங்களின் பாசனப் பரப்பு 20 ஆயிரம் ஏக்கரிலிருந்து 2 இலச்சம் ஏக்கராக அதிகரித்தது.

தொடரும்...

Sunday, September 25, 2011

முல்லைப்பெரியாறும் துரோகத்தின் வரலாறும் - 2

முல்லைப் பெரியாறு அணை கட்டிய வரலாறு :


தமிழகத்தின் நெல்லை மாவட்டம் சுந்தரமலையில் உள்ள சிவகிரி சிகரத்தில் தோன்றும் பெரியாறு. தன்னோடு பெருந்துறையாறு, சின்ன ஆறு, சிறு ஆறு, சிறுதோணி ஆறு, கட்டப்பனையாறு, இடமலையாறு, முல்லையாறு, ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டு சுமார் 300 கிலோ மீட்டர் வடமேற்குத் திசையில் பாய்ந்து இறுதியில் கொச்சி எர்ணாகுளம் அருகே கடலில் கலக்கிறது. பெரியாறு தற்போதைய தமிழக எல்லைக்குள் 56 கிலோ மீட்டர் தூரமும், தற்போதைய கேரள எல்லைக்குள் 244 கிலோ மீட்டர் தூரமும் பாயிகின்றது. அடர்ந்த வனப்பகுதிகளின் வழியாகப் பாய்ந்தோடும் பெரியாற்றின் சமவெளிப் பகுதி வெறும் 25 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே.


பெரியாற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் சூன், சூலை, ஆகஸ்ட்டு மாதங்களில் தென்மேற்குப் பருவ மழையும், அக்டோபர், நவம்பர், திசம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவ மழையும் பொழிவதால் ஆண்டின் பெரும்பகுதிக்காலம் பெரியாற்றில் வெள்ளம் வழிந்தோடுகிறது. இது ஒருபுறமிருக்க,
'கோள்நிலை திரிந்து கோடை நீடினும்

தான் நிலை திரியா தண்டமிழ்ப் பாவை'
என பழந்தமிழ் இலக்கியங்களால் குறிக்கப்பெறும் வைகை ஆறு மதுரை. சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளை வலப்படுத்திவந்தது. 18 மற்றும் 19 ஆம் நுற்றாண்டுகளில் வைகை ஆறும் பொய்த்துப்போனது. இதனால் வேளாண்மை உற்பத்தி சீர்குலைந்தது.வேளாண்மைத் தொழிலை மேற்கொண்ட இப்பகுதி மக்கள் வறட்சியின் கோரப் பிடிக்குள் சிக்குண்டு பஞ்சத்தாளும் பசியாலும் பட்டினியாலும் பல்வேறு இன்னல்களைச் சந்திக்க நேரிட்டது. இந்நிலையில் இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கும் வேளாண்மை உர்ப்பத்தித் தேவைக்கும் ஆற்று நீரையே பயன் படுத்த வேண்டிய கட்டாயம் இருந்த காரத்தினால். அபோதைய இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் மற்றும் அமைச்சர் முத்து இருளப்பர் ஆகியோர், பெரியாற்றில் இருந்து கால்வாய் வெட்டி - மேற்கு நோக்கிச் செல்லும் ஆற்று நீரை தென் தமிழகம் நோக்கித் திருப்பிக் கொண்டுவருவது பற்றி ஆராய 1798 இல் ஒரு குழுவை அமைத்தனர். இகுழு அளித்த திட்டத்தை போதிய நிதி இல்லாத காரணத்தால் சேதுபதி மன்னர்களால் நிறைவேற்ற முடியவில்லை. இதன் பிறகுதான் ஆங்கிலேயர்கள் மேற்குறித்த திட்டம் குறித்து ஆய்வு செய்யத் தொடங்கியதோடு, அத்திட்டத்தை நிறைவேற்றவும் அக்கறை காட்டினர்.


1808 இல் ஜேம்ஸ் கால்டுவெல் என்பவர் அணை கட்டும் திட்ட ஆய்வைச் செய்துள்ளார். 1850 இல் முல்லையாற்றில் அணை கட்டும் முயற்ச்சியானது, அப்பகுதியில் தொற்று நோய் பரவியதன் காரணமாக நின்று போனது. பின்னர் 1862 இல் 162 உயர அணை கட்டும் திட்டம் மேஜர் ரைவீஸ் மற்றும் மேஜர் பேயின் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. இத்திட்டம் குறித்து மேலும் ஆராய்வதற்காக 1868 இல் கர்னல் ஜெ. பென்னி குயிக் என்பவரை அப்போதைய ஆங்கில அரசாங்கம் நியமித்தது. இதற்கிடையில், 1870 இல் பென்னி குயிக் மாற்றப்பட்டு இத்திட்டத்தை நிறைவேற்ற ஸ்மித் என்பவர் நியமிக்கப்பட்டார். 175 அடி உயரத்தில் அணை கட்டும் திட்டத்தை அவர் முன்மொழிந்தார். இத்திட்டத்தை ஆராய்ந்த ஆங்கிலேய அரசு அதை நிறை வேற்றும் பொறுப்பை திரு.பென்னி குயிக்கிடம் 1882 இல் மீண்டும் வழங்கியது. உரூ.65 இலச்சம் மதிப்பீட்டில் அணை கட்டும் திட்டம் இறுதியாக்கப்பட்டது.


முல்லை ஆறும், பெரியாரும் இணையும் இடத்திற்கு அருகே அணை கட்ட முடிவு எடுக்கப்பட்டது அணை கட்டப்பட விருந்த இப்பகுதியானது முழுவதுமான தமிழர் பகுதியாகும். தேவிகுளம், பீர்மடு போன்ற பகுதிகள் தமிழர்கள் வாழ்ந்து வந்த பகுதியாகும். இன்றளவும் அப்பகுதிகளில் தமிழர்களே பெரும்பான்மையாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அணை கட்டப்படவிருக்கும் இப்பகுதியிலிருந்து சுமார் 62 கிலோமீட்டர் தொலைவுவரை தமிழ்நாட்டு எல்லைப்பகுதி அமைந்திருந்தது. இதற்க்குபின்புதான் கொட்டாரக்கரை அடூர் போன்ற பகுதிகள் கொண்ட அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான எல்லை தொடங்குகிறது. இருப்பினும் அணை கட்டப்படவுள்ள பகுதி தமிழ்நாட்டு பகுதியா, திருவிதாங்கூர் சமஸ்தான பகுதியா என்பதில் தெளிவில்லாத ஆங்கிலேய அரசாங்கம். ஆணை கட்டப்படவுள்ள பகுதி திருவிதாங்கூர் சமஸ்தான பகுதி என்பதாகக் கொண்டு, 1886 அக்டோபர் 28 இல் திருவிதாங்கூர் சமஸ்த்தானத்துடன் 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தைச் செய்துகொண்டது. இவ்வொப்பந்தப்படி அணை நீரால் மூழ்கும் 8000 ஏக்கர் நிலமும் பராமரிப்புக்கான 100 ஏக்கர் நிலமும், அணையில் தேங்கும் நீரும். அணையின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பும், படகு மற்றும் சாலை போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் தமிழ்நாட்டிற்குச் சொந்தமாகும். புதிதாக கட்டப்பட்டுள்ள இவ்வணை நீரானது தமிழ்நாட்டிற்குத் தொடர்ந்து காலம்காலமாகக் கிடைக்கச் செய்யவேண்டும் என்ற நோக்கத்திற்காக 999 ஆண்டுகள் ஒப்பந்த்தம் போடப்பட்டாலும் இந்த ஒப்பந்த்த காலம் முடியும் தருவாயில் மீண்டும் 999 ஆண்டுகள் ஒப்பந்த்தம் செய்து கொள்வதற்கான உறுதிமொழியையும் திருவிதாங்கூர் சமஸ்த்தானத்திடமிருந்து ஆங்கிலேய அரசாங்கம் மேற்படி ஒப்பந்தத்திலேய பெற்றிருக்கிறது. ஆக அப்பகுதியில் கட்டப்படும் அணை நீரானது எல்லா காலத்திற்கும் தமிழ்நாட்டிற்கு வரவேண்டும் என்பதுதான் அணை கட்டப்படுவதன் நோக்கமும் ஒப்பந்தத்தின் சாரமும்மாகும்.

தொடரும்...

Monday, August 15, 2011

முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும் -பாகம் ஒன்று

தவிர்க்க முடியாத சிக்கல்களால் நின்று போன முல்லைப்பெரியாரும் துரோக வரலாறும் தொடர் மீண்டும் தொடர்கிறது, உங்களுக்காக தொடர் ஒன்று முதல்...


முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும்
-பாகம் ஒன்று

தமிழகத்தின் ஆறுகள் சிதைந்த வரலாறு

" நீரின்றி அமையாது உலகு" என்றார் வள்ளுவர். இன்றையச்சுழலில் 'சில ஆறுகள்இன்றி அமையாது தமிழகம்' என்றே குறிப்பிடலாம். தாவரங்கள், விலங்குகள்மற்றும் மனித உயிர்களின் அடிப்படை வாழ்வாதாரங்களில் நீர் ஆதாரமும் ஒன்று. மனித உயிர்களால் உற்பத்தி செய்யமுடியாத நீர் ஆதாரமே இயற்க்கை வழங்கியமிகப்பெரும் கொடையாகும். மேலும் இந்நீர் ஆதாரமானது மனித சமுகத்தின்உற்பத்தி நடவடிக்கைகளான வேளாண்மை மற்றும் தொழில்துறைக்கும்அடிப்படையாகவும் அமைந்திருக்கிறது.
தமிழ்நாட்டின் பெரும்பான்மை உற்பத்தி நடவடிக்கையானது வேளாண்மைத்துறை சார்ததாகவே அமைந்திருக்கிறது. இயற்கையாய் உருவெடுத்துத் தன் போக்கில் ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைத் தடுத்தும், மறித்தும், திசை திருப்பியும். அணைகளை எழுப்பியும் உகந்த வகையிலே பயன்படுத்தமுடியும். தமிழ்நாட்டில் ஓடிய வைகையாறு, காவிரியாறு, பவானியாறு ,நொய்யலாறு, தாமிரபரணியாறு, பாலாறு, ஆரணியாறு, கொரட்டளையாறு, கூவமாறு, அடையாறு, ஓங்கூராறு, வராகஆறு, மலட்டாறு, பெண்ணையாறு, கடிலமாறு, வெள்ளாறு, அக்கினியாறு, அம்புலியாறு, வெண்ணாறு, கொலுவநாறு, பம்பாறு, மணிமுத்தாறு, கோட்டைக்கரையாறு, உத்திரகோசமங்கையாறு, குண்டாறு, வேம்பாறு, வைப்பாறு, கல்லாறு, கோரம்பள்ளமாறு, கரமனையாறு, நம்பியாறு, அனுமானாறு, பல்லவாறு, வள்ளியாறு, கோதையாறு போன்ற ஆறுகள்.தமிழ்நாட்டின் குடிநீர்த் தேவையையும் வேளாண்மை உற்பத்தித் தேவையையும் நிறைவு செய்து வந்தன. அதே சமயத்தில் வேகமாக உருவெடுத்துவந்த தரகு-முதலாளித்துவத் தொழில்துறை ஆலைகளாலும், பெருநகரங்கள் உருவாக்கத்தாலும், நச்சுக்க்ழிவுநீர்க் கலப்பாலும், தமிழ்நாட்டில் ஓடிய பல ஆறுகள் சிதைந்தும், காணாமலும்,அழிக்கப்பட்டும் விட்டன. ஆறுகளும் நீரின்றி வறண்டு போய்க்கிடக்கின்றன.

'காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி - என


மேவிய ஆறு பலவினும் - உயர்
வெள்ளை மணல் கொண்ட தமிழ்நாடு'

என்ற கண்னதாசனின் பாவரிகள் தமில்நாட்டில்லுள்ள ஆறுகளின் அவலத்தை உணர்த்தும். ஓர் ஆற்றின் இக்கரையிலிருந்து அக்கரைசெல்வதற்கு அன்று ஓடம் தேவைப்பட்டது. ஆனால் இன்றோ காலில் செருப்பு இருந்தால் மட்டுமே ஆற்றைக் கடக்க முடியும் என்ற நிலையில் தமிழ்நாட்டின் ஆறுகள் மணல் திட்டுகலாய்க் காட்சியளிக்கின்றன. இம்மாற்றங்கள் இயற்கையினால் மட்டுமே நிகழ்ந்ததாகச் சொல்லமுடியாது. தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள கருநாடகம்,ஆந்திரம், மற்றும் கேரள அரசுகளின் துரோகங்களும், அத்துரோகங்களுக்கு டில்லி அரசு துணை சென்றதும் ஒரு காரணமாகும். காவிரி ஆற்றில் துரோகம்.... பாலாற்றில் துரோகம்...... இந்த வரிசையில் முல்லைப் பெரியாறு அணையிலும் தொடர் துரோகங்கள்.....

முல்லைப் பெரியாற்று நீர் யாருக்குச் சொந்தம்? அதன் வரலாறு என்ன? அதற்க்கு இழைக்கப்பட்ட துரோகங்கள் என்ன? பெரியாற்றின் உரிமைகலுக்காய்ப் போராடுவதன் பாதை என்ன? முல்லைப் பெரியாற்றில் தமிழர் உரிமையை வென்றெடுப்பது எப்படி?

தொடரும்....

Tuesday, February 22, 2011

இந்திய விரிவாதிக்க நலனுக்காக தமிழன் இருந்தாலென்ன?செத்தாலென்ன?தமிழக மீனவர்கள் சிங்கள இராணுவத்தால் அன்றாடம் படுகொலை செய்யப்படுவதைகண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணி, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைமுன்னணி, புரட்சிகர மாணவர் முன்னணி,புரட்சிகர தொழிலாளர் முன்னணி. சார்பாகதோழர் மார்க்ஸ், தலைமையில் சென்னையில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் முன்பு28/01/2011 காலை 11.00 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அன்றாடம் தமிழக மீனவர்கள் சிங்கள இனவெறி அரசால் படுகொலைசெய்யப்படுகிறார்கள். இந்திய விரிவாதிக்க நலனுக்காக தமிழன் இருந்தாலென்ன?செத்தாலென்ன? என்ற இந்திய அரசின் நிலையை கண்டித்தும் தமிழக அரசிடம்இந்திய நுகத்தடியை துக்கியேறி, தமிழக மீனவர்களுக்கு ஆயுதம் வழங்கு என்றகோரிக்கையை முன் வைத்தும், டெல்லியின் எடுபிடியாக இருந்து தமிழகத்தைகொள்ளையடிக்கும் கருணாநீதியையும், முதலை கண்ணீர் வடிக்கும்ஜெயலலித்தாவையும் கண்டித்து முழக்கமிட்டனர்.

தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி டெல்லி அரசிடம் கடிதம் எழுதுவதாக கூறி தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார், இதுவரைக்கும் 500 மேற்பட்ட தமிழக மீனவர்க ளை சிங்கள இனவெறி அரசு சுட்டு கொன்றுள்ளது. விரிவாதிக்க வெறிபிடித்த இந்திய அரசோ ராஜபக்சே அரசை ஆதரித்துவருகிறது.
என கண்டித்தும், தமிழக இறையாண்மை உரிமைக்காக போராட வேண் டும் என பேசினர்

இந்த ஆர்ப்பாட்டம் சென்னை ஆழ்வார்பேட்டை தபால் நிலையம் அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு, டி.டி.கே சாலை வழியே சென்று இலங்கை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் செய்த தோழர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

மணிவண்ணன்

புரட்சிகர இளைஞர் முன்னணி,

சென்னை.தமிழ்நாடு.


Thursday, September 23, 2010

கருணாநிதி அரசின் கருத்துரிமைப் பறிப்பை கண்டித்து சென்னையில்பு.இ.மு கண்டனப் பொதுக்கூட்டம்செப்டம்பர்-09-2010
சென்னை அடுத்த பல்லாவரத்தில் பேருந்து நிலையம் அருகில் கருணாநிதி அரசின் கருத்துரிமைப் பறிப்பு மற்றும் அடக்குமுறைக்கு ஏதிராக புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினரால் கருணாநிதி அரசே! கருத்துரிமையைப் பறிக்காதே! பொய்வழக்குகளை உடனே திரும்பப்பெறு! தமிழக மக்களே!சனநாயக் சக்திகளே! அடக்குமுறைக்கு எதிராக அணிதிரள்வோம்! என்ற முழக்கத்தை முன்வைத்து 09-09-௨0௧0,மாலை 6.00 மணி அளவில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தினர்.


நடந்து முடிந்த தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழக முதலமைச்சர் கருணாநிதியை " ஈழத்தமிழர்களை கொன்றொழிக்கத் துணைப் போன எட்டப்பன் கருணாநிதியை கட்டபொம்மனாகக் காட்டச் செம்மொழி மாநாடா ?" என்று விமர்சித்து துண்டறிக்கை,சுவரொட்டிகள் மூலம் பரப்புரை செய்த புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினரை தமிழகம் முழுவதும் 150 மேற்பட்டோர் மீது பொய் வழக்கு பொட்டு (124 ஏ தேச விரோத வழக்கு,ரவுடித்தனம் செய்ததாக, காவல்துறைக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக,வாகனங்களைக் அடித்து நொறுக்கி போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாக, காவல்துறையினர் மிது கல் வீசியதாக) சிறையில் அடைத்தனர். இக்கைதை கண்டித்தும் கருத்துரிமைக் பாதுகாக்க கோரி செப்-4 ல் நடத்த திட்டமிருந்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு சென்னை குரோம்பேட்டையில் பெண் தோழர் உட்பட 4 பேர் மீது வழிப்பறி செய்ததாகவும்,கொலை மிரட்டல் செய்ததாகவும் பொய் வழக்கு போட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தது கருணாநிதி அரசு. " சென்னை உயர்நீதிமன்றத்தில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்த ஆணை பெற்று " சனநாயக விரோத கருணாநிதி அரசை கண்டித்து சென்னை பல்லாவரம் பேருந்து நிலையம் அருகில் புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினரால் கண்டனப் பொதுகூட்டம் நடத்தினர்.


இப்பொதுக்கூட்டத்திற்கு தோழர்.தமிழ்வாணன்(புரட்சிகர இளைஞர் முன்னணி) தலைமை தாங்கினார். தோழர்.மார்க்ஸ்(புரட்சிகர இளைஞர் முன்னணி),சிவ.காளிதாசன்(த.தே.வி.இ),மா.மானோகரன்(ம.ஜ.இ.க),கா.ஆனந்தன்(ஒ.ம.வி.மு),தாமரை(பு.தொ.மு) ,மு. நடராஜன்(இ.பொ.க(மா.லெ)-மக்கள் விடுதலை), ம.ரே.ராசுக்குமார்(பெ.தி.க), கரிகாலன்(த.தே.இ)), இராசிவ்காந்தி(நாம் தமிழர் கட்சி),கபிலன்(பு.மா.மு) ஆகிய அமைப்பு பிரதிநிதிகள் கலந்துக்கொண்டு கருணாநிதி அரசின் தமிழர் விரோத அடக்குமுறைகளை கண்டித்தும்,சிறையில் உள்ள தோழர்களை உடனே விடுதலைச் செய்யக்`கோரியும் கண்டன உரையாற்றினார்கள்.

தோழமையுடன்,
புரட்சிகர இளைஞர் முன்னணி
சென்னை,தமிழ்நாடு.

Thursday, June 17, 2010

எட்டப்பன் கருணாநிதியை கட்டபொம்மனாக காட்ட செம்மொழி மாநாடா ?

ஈழ தமிழர்களை கொன்றொழிக்கத் துணை போன எட்டப்பன் கருணாநிதியை கட்டபொம்மனாக காட்ட செம்மொழி மாநாடா ?


என்ற முழக்கத்தினை தமிழ்நாடு முழுவதும் புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர்கள் துண்டறிக்கை மூலம் பரப்புரை மேற்கொண்டனர் .