Tuesday, January 17, 2012

முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும் -4

முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும் -4



முல்லைப் பெரியாற்று நீரைத் திருட கேரள அரசுகள் சதி:




1956 இல் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழர்கள் காலங்காலமாக வாழ்ந்து வந்த தேவிகுளம், பீர்மேடு (முல்லைப் பெரியாற்று அணை அமைந்துள்ள பகுதி) போன்ற பகுதிகள் அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக கேரள மாநிலத்தோடு இணைக்கப்பட்டன. தமிழ்நாட்டுப் பகுதிகளான தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் கேரளப் பகுதிகள் தான் என்ற தோற்றத்தை உருவாக்குவதற்கு மலையாளிகளின் குடியேற்றத்தை அப்போதைய கேரள அரசு திட்டமிட்டு நடத்தியது. அதாவது இலங்கையில் சிங்கள இனவெறி அரசு, தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்கள மக்களை வலுக்கட்டாயமாக குடியமர்த்தித் தமிழீழத்தை ஆக்கிரமிப்பு செய்து வருவது போல, அப்போதைய கேரள முதல்வர் பட்டம் தாணுப்பிள்ளை என்பவர் கேரளச் சிறைகளில் இருந்த மலையாளக் கைதிகளை விடுவித்து, அவர்களுக்கு உருபாய் 5 ஆயிரமும் 5 ஏக்கர் நிலமும் கொடுத்து தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் குடியமர்த்தும் வேலைகளைச் செய்தார். தமிழ்நாட்டின் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் கேரளப் பகுதிகள்தான் என்பதைக் காட்டுவதற்காக மலையாளக் குடியேற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தன.







இத்தகைய மலையாளக் குடியேற்றங்களுக்குப் பின்புதான் 1963 இல் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்ற புரளியை, கேரளாவின் மனோரமா இதழ் மூலம் மலையாள மக்களிடம் பரப்பி இனவெறியைத் தூண்டிவிட்டது கேரள அரசு. அன்று முதல் இன்று வரையிலும் தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில் மலையாள மக்களை குடியேற்றம் செய்தல், பெரியாறு அணை பலவீனமாக உள்ளது எனப் புரளியைக் கிளப்புதல், அணையினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற பயத்தை உருவாக்குதல், பெரியாற்றின் துணை ஆறுகளில் தடுப்பு அணைகளைக் கட்டுதல் தமிழகத்தின் எல்லைக்குள் உள்ள செண்பகவல்லி அணையை உடைத்தல், முல்லைப் பெரியாறு அணை நீர் தேங்கும் பகுதிகளை ஆக்கிரமித்து அரசுக் கட்டிடங்களைக் கட்டுதல், தனியார் பண முதலைகளுக்கு சொகுசு மாளிகைகளும் நட்சத்திர விடுதிகளும் கட்டுவதற்கு அனுமதியளித்தல், சுற்றச் சூழல் பாதிக்கப்படும், வன விலங்குகள் அழியும் எனப் பொய் கூறுதல். அணையைப் பலப்படுத்தும் பணிகளைச் செய்யவிடாமல் தடுத்தல், நிலநடுக்கத்தால் அணை உடைந்துவிடும் என்ற பீதியை உண்டாக்குதல், அணை உடைவது போன்றும், 35 இலச்சம் கேரள மக்கள் அரபிக் கடலில் மிதப்பது போன்றும் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ காட்சிகளை ஒளிபரப்புதல் போன்ற அடாவடித் தனங்களை 1956 முதல் இன்று வரை கேரளத்தை ஆண்டுவரும் மார்க்சிய கம்யுனிஸ்ட் (சி.பி.எம்) கட்சியும், காங்கிரசுக் கட்சியும் மற்றுமுள்ள கேரளாவின் உதிரிக் கட்சிகளும் செய்து வருகின்றன. 'அணைக்கு ஆபத்து' 'அணையால் ஆபத்து' என்று ஒரே குரலில் திரும்பத் திரும்ப பொய் சொல்லி வருகின்றன.

தொடரும்...

No comments:

Post a Comment