Sunday, October 18, 2009

முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும் -6

முல்லைப் பெரியாறு பலப்படுத்தப்பட்ட வரலாறு- 2

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 1978 இல் 145 அடியாகவும் 1979 முதல் 136 அடியாகவும் குறைக்கப்பட்டதால், ஒரு போகம் மட்டுமே சாகுபடி செய்த சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளில் சுமார் 40,000 ஏக்கர் நிலம் தரிசாக மாறியது. காலங்காலமாக வறட்சியால் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்கள் தங்கள் நிலங்கள் தரிசாகக் கிடப்பதைப் போட்டுவிட்டு, பிழைப்பு தேடி சொந்த மண்ணையும் விட்டு வெளியேறி பெரு நகரங்களுக்கும், வெளிமாநிலத்திற்கும், வெளிநாடுகளுக்கும் சென்று, மிகக் குறைந்த கூலிக்குக் கொத்தடிமைகளைப் போல வேலை செய்து, அகதியைப் போல வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதோடு, இரு போகம் சாகுபடி செய்த ஒரு இலச்சம் ஏக்கர் நிலங்கள் ஒரு போகம் சாகுபடியாக மாறியது. இம்மாவட்டங்களின் நிலத்தடி நீர் மட்டமும் அதல பாதாளத்திற்குச் சென்றுவிட்டது. மேலும் இப்பகுதி மக்களின் குடிநீர்த் தேவைக்குக் கூட நீரில்லாமல் குளம், கண்மாயி, ஏரிகள் அனைத்தும் வறண்டு போயிக் கிடக்கின்றன. பல கோடி ரூபாய் செலவில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

1979 இல் மத்திய நீர்வள ஆணையத்தின் முன்னிலையில் இரு மாநில அரசுகளும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்தும் பணிகளை 1985 லேயே முடித்த பின்பும் அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவதர்க்குக் கேரள அரசுகள் மறுத்து வந்தன. இதனால் கால் நூற்றாண்டு காலமாகப் பாதிக்கப்பட்ட உழவர்கள் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையை உச்ச நீதி மன்றத்திற்குக் கொண்டு சென்றனர்.

மத்திய நீர்வள ஆணையம், மத்திய மண் விசையியல் ஆராய்ச்சி நிலையம், ஆகியவற்றைச் சார்ந்த தலைசிறந்த நிபுணர்கள் அணையைப் பார்வையிட்டதற்குப் பின்பாக, அணையைப் பலப்படுத்தும் பணிகள் முடிந்துள்ளன என்று சான்று வழங்கியதோடு, அணையின் நீர் மட்டத்தை உயர்த்தகூடாது என்பதற்கு கேரள அரசால் சொல்லப்பட்டக் காரணங்கள் அனைத்தும் பொய்யானவையே எனக்கூரி நிராகரித்தனர். அணையின் நீர்மட்டத்தை முதற்கட்டமாக 145 அடிக்கு உயர்த்துவதால் அணைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் அந்நிபுணர்கள் கூரிவிட்டனர். இதன் அடிப்படையில்தான் கடந்த 27-02-2006 அன்று "முல்லை பெரியாறு அணையில் 142 அடிவரை நீரைத் தேக்கலாம்" என உச்ச நீதிமன்றம் தீர்ப்பும் வழங்கியுள்ளது. ஆனாலும், கேரள அரசு 1979 இல் தமிழ்நாட்டுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறுவதோடு, நிபுனர்க் குழுக்களின் அறிக்கையையும் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மதித்துச் செயல்படுத்த மறுக்கிறது. முல்லைப் பெரியாறு அணையில் சட்ட வழியிலும், அறிவியல் வழியிலும், அறவழிப்பட்ட வகையிலும் தமிழ்நாட்டின் உரிமைகளை ஏற்க மறுத்து, சண்டித்தனம் செய்வதோடு, பழைய பொய் களையே கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு, கேரள மக்களிடம் பய பீதியை ஏற்படுத்தியும் இனவெறியை ஊட்டியும் வருகின்றது கேரள அரசு.
தொடரும்...

No comments:

Post a Comment