Monday, October 26, 2009

முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும் -8

மலையாள இனவெறிக்கு எடுபிடிகளான தமிழக சி.பி.எம்.


முல்லைப் பெரியாறு அணை நீரிலிருந்து ஒரு ஏக்கர் அளவில் கூட கேரளம் விவசாயம் செய்யாத நிலையிலும், கேரள மக்களின் தேவைக்கு இந்நீரைப் பயன்படுத்தாத போதிலும் தமிழ்நாட்டிற்கு நீரைத் தர மறுப்பதோடு, அணை நீரை வீணாகக் கடலில் கலக்கும் வேலையைத்தான் கேரள சி.பி.எம். அரசு செய்து வருகின்றது. தமிழ்நாட்டின் விளை நிலங்களைத் தரிசாக்கிவிட்டு - தமிழ்நாட்டு உழவர்களை வேளாண்மை உற்பத்தியிலிருந்து விரட்டியடிக்கும் நோக்கத்தில் தான் விவசாயப் புரட்சி பேசும் சி.பி.எம். கட்சி தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்து கொண்டிருக்கிறது. கேரள சி.பி.எம். கட்சியின் இத்துரோகத்தனத்திற்கு எடுபிடியாகத் தமிழ் மாநில சி.பி.எம். கட்சியும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.


முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிடச் சென்ற தமிழ்நாட்டின் அமைச்சர் துரைமுருகனை கேரள சி.பி.எம். குண்டர்கள் முற்றுகையிட்டு இழிவாகவும், தரக்குறைவாகவும் திட்டியபோது, மலையாள இன வெறியுட்டும் கேரள சி.பி.எம். கட்சியின் தமிழர் விரோத நடவடிக்கையைக் கண்டிக்கக்கூட மறுத்தது தமிழ் மாநில சி.பி.எம். கட்சி. இதற்குக் காரணம், தமிழ்நாட்டில் எத்தனை முறை சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்தாலும், தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் நான்கைந்து உறுப்பினர்களை மட்டுமே தமிழ்நாட்டு சி.பி.எம். கட்சியால் பெறமுடியும். ஆனால், கேரளத்தில் முதல்வர் பதவியே பெறமுடியும். ஆக சி.பி.எம். கட்சியைப் பொறுத்தளவில் ஆட்சியைப் பிடிப்பது - பதவியைக் காப்பாற்றுவது ஒன்று மட்டும்தான் நோக்கம். இந்நோக்கத்தை நிறைவேற்றத்தான் இந்தியாவில் உள்ள எல்லா சி.பி.எம். கிளைகளின் செயல்பாடுகளும் அமைந்திருக்கின்றன.
தொடரும்...

No comments:

Post a Comment