முல்லைப் பெரியாறு பலப்படுத்தப்பட்ட வரலாறு:
கேரள அரசு மற்றும் கேரள இனவெறிக் கட்சிகள் சொல்வதைப் போன்று முல்லைப் பெரியாறு அணைக்கு எவ்விதப் பாதிப்புகளும் ஏற்பட்டதில்லை. இனியும் பாதிப்புகள் வருவதாகத் தெரியவில்லை. அதாவது 1924, 1933, 1940, 1943, 1961, 1977 ஆகிய ஆண்டுகளில் அணையின் முழுக் கொள்ளளவான 152 அடிவரை நீரைத் தேக்கிவைத்த போதும் அணைக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை.மேலும் 1943 இல் மிக அதிகபட்சமாக 154 அடிவரை நீர் மட்டம் உயர்ந்த போதும் அணைக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது அணையானது பலமாகக் கட்டப்பட்டது என்றாலும் தமிழக அரசு இன்றைய கேரள மாநிலம் உருவாக்கப்படுவதற்கு முன்பே 1930,1933 ஆகிய ஆண்டுகளிலும், கேரள மாநிலம் பிரிக்கப்பட்டப் பிறகு 1960 ஆம் ஆண்டிலும் கேரள அரசுகள் சொல்லாமலேயே அணையைப் பலப்படுத்தும் பணிகளைச் செய்து கொண்டுதான் இருந்தது. இது ஒருபுறமிருக்க, 1976 இல் முல்லைப் பெரியாறு அணைக்குக் கிழே 40 கிலோமீட்டர் தொலைவில் 555 அடி உயரமுள்ள இடுக்கி அணையை 800 மெகாவாட் நீர் மின் உற்பத்திக்காகக் கட்டி எழுப்பியது கேரள அரசு. இடுக்கி அணை கட்டப்பட்டது முதல் இன்று வரையிலும் ஒரு முறைகூட முழுக் கொள்ளளவுக்கும் நிறையவில்லை. இந்த இடுக்கி அணை கட்டப்பட்ட பிறகுதான் கேரள அரசு தனது பொய்பபுறடடுகளை வேகமாகப் பரப்பி வந்தது.
1978 இல் அணை பலவீனமாகிவிட்டது என்று கேரள அரசு மீண்டும் புரளியைக் கிளப்பிவிட்டதால் அணையின் நீர் மட்டம் 145 அடியாகக் குறைக்கப் பட்டுவிட்டது. இதை தொடர்ந்து 1979 இல் பீர்மடு எம்.எல்.ஏவாக இருந்த கே.கே.தாமஸ் என்பவர் அணையின் நீர் மட்டத்தை மீண்டும் குறைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார். அப்போது அணையைப் பார்வையிட்ட மத்திய நீர்வள ஆணையத் தலைவர் 'அணை பலமாகவே உள்ளது, கேரள மக்களின் அச்சம் தேவையற்றது' எனக் கூறினார். இருப்பினும் கேரளத்தின் அச்சத்தைப் போக்குவதற்கு அணையைப் பலப்படுத்தும் பணிகளைக் கீழ்கண்டவாறு செய்யவேண்டும் என கேரள-தமிழ்நாடு அரசுகளிடையே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதற்கிடையில் அணையைப் பலப்படுத்தும் பணிகள் செய்து முடிக்கும் வரை அணையின் நீர் மட்டம் 136 அடியாகத் தற்காலிகமாகக் குறைக்கப்பட்டது. கேரள-தமிழ்நாடு அரசுகளிடையே செய்து கொண்ட ஒப்பந்தப்படி,
1. அணையின் மேற்புற கைப்பிடிச்சுவரின் உயரத்தைக் கூட்டுதல்.
2. 12 அடி அகலமுள்ள அணையின் மேற்புறத்தை 21 அடியாக மாற்றும் வகையில் கான்கீரிட் தொப்பி அமைத்தல்.(RCC Capping)
3. அணையை அதன் அடித்தளப் பாறையுடன் இரும்புக் கம்பி நங்கூரம் அமைத்துஇணைத்துக் கட்டுதல். (Cable Anchoring )
4. தற்போதுள்ள 144 அடி அகலமுள்ள அடித்தளத்துடன் புதியதாக 56 அடி அகலமுள்ள கான்கீரிட் சப்போர்ட் அணையை 145 அடி உயரம் வரை கட்டுதல்.
5. தற்போதுள்ள 36 அடி அகலம் 16 அடி உயரம் கொண்ட 10 நீர்ப்போக்கி மதகுகளுடன் கூடுதலாக 40 அடி அகலம் 16 அடி உயரம் உள்ள 3 மதகுகளை அமைத்தல்.
அணையை பலப்படுத்தும் பணிகளைச் கேரள ஒப்பந்தக்காரர்களைக் கொண்டே தமிழ்நாடு அரசு செய்து வந்தாலும், அப்பணிகளை முடிக்கவிடாமல் கேரள அரசுகள் இடையுறு செய்து வந்தன. இதன் காரணமாகவே மூன்று ஆண்டுகளில் முடிய வேண்டிய பணிகள் பல ஆண்டுக் கணக்கில் செய்ய வேண்டியதாகிப் போனது. இதற்கிடையில் பெரியாறு நீர் பிடிப்புப் பகுதிகளில் கெவி அணை, ஆணைத்தோடு அணை, கட்கி அணை, பம்பா அணை போன்ற அணைகளைக் கட்டியெழுப்பி முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்தையும் கேரள அரசுகள் குறைத்துவிட்டன.
தொடரும்...
No comments:
Post a Comment